பிரிட்டனில் பரவியுள்ள புதிய வகை கொரோனா வைரஸ், பிரிஸ்பனில் சமூக பரவல் ஊடாக ஒருவருக்கு தொற்றியுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அடுத்த மூன்று நாட்களுக்கு பிரிஸ்பன் பெருநகரம் முடக்கப்படுகிறது.
பிரிஸ்பன், Logan, Ipswich, Moreton Bay, Redlands ஆகிய பகுதிகள் இன்று மாலை 6 மணிமுதல் திங்கள் மாலை 6 மணிவரை முடக்கப்படுவதாக குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk அறிவித்தார்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு, மருத்துவ பராமரிப்பு பெற, உடற்பயிற்சி மற்றும் வேலை ஆகிய நான்கு காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியும்.
மேலும் மக்கள் வீடுகளைவிட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஏனைய ரக கொரோனா வைரஸைவிட அதிகளவு பரவும் தன்மைகொண்ட கொரோனா வைரஸ் பிரிட்டனில் கடும் பாதிப்புக்களை ஏற்படுத்திவரும் பின்னணியில் வெளிநாட்டிலிருந்து குயின்ஸ்லாந்து திரும்பிய நபரிடம் இவ்வைரஸ் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து வெளிநாட்டிலிருந்து திரும்பிவருபவர்கள் தனிமைப்படுத்தப்படும் ஹோட்டலில் பணிபுரிந்த சுத்திகரிப்பு பணியாளர் ஒருவருக்கு குறித்த வகை வைரஸ் தொற்றியிருப்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டது.
அதிகளவு தொற்றும்தன்மை கொண்ட இவ்வைரஸைக் கட்டுப்படுத்த இறுக்கமான முடக்கநிலை தேவைப்படுவதாக குயின்ஸ்லாந்து Premier Annastacia Palaszczuk தெரிவித்தார்.
இதேவேளை பிரிஸ்பன் பெருநகரத்திலுள்ள pubs, cafes, உணவகங்கள் போன்றவை take-away சேவையை மட்டுமே வழங்கமுடியும்.
வீடுகளுக்கு இரு விருந்தினர்கள் மட்டுமே வருகைதர முடியும்.
இறுதிநிகழ்வுகளில் 20 பேரும் திருமண நிகழ்வுகளில் 20 பேரும் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்.
குயின்ஸ்லாந்தில் சுமார் 4 மாதங்களின்பின் சமூகப் பரவல் ஊடாக கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சளி அல்லது flu அறிகுறிகள் ஏற்பட்டால் வீட்டிலேயே இருங்கள். மற்றும் உங்கள் மருத்துவரை அழைத்து சோதனைக்கு ஏற்பாடு செய்யுங்கள். அல்லது Coronavirus Health Information Hotline-ஐ 1800 020 080 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
