ஸ்கொட்லாந்து அயர்லாந்து பகுதியில் செல்டிக் (Celtic) விழாவாக, ஒரு திருவிழாவாக இருந்து வந்தது.  இந்த விழா ஃகேலிக் (Gaelic) நாகரிகத்தின் அறுவடைக் காலங்களில் கொண்டாடப்படுகிறது.  சிலர், இந்த விழா செல்டிக் புது வருடம் என்றும் சொல்வார்கள்.
பூவுலகத்திற்கும் மறு உலகத்திற்குமிடையிலான இடைவெளி இந்நாளில் மெலிந்து போவதாய் முன்னைய செல்ட் இனத்தவர் நம்பினார்கள்.  அன்றைய தினம், தங்களது முன்னோர்களின் ஆவிகளுக்கு அவர்கள் மரியாதை செய்வதோடு தீங்கிழைக்கும் பிற ஆவிகளை துரத்தவும் செய்வார்கள். தீய ஆவிகளிலிருந்து தங்களைப் பாதுகாக்கும் அடையாளமாக தாங்களும் அது போன்ற முகமூடிகளையும் ஆடைகளையும் அந்த நாளில் அணிந்து கொள்கின்றனர்.
செம்மஞ்சள் (orange) மற்றும் கருமை ஆகிய இருவண்ணங்கள் இந்த கொண்டாட்டத்துடன் தொடர்புடைய வண்ணங்கள்.  இவை இருளையும் நெருப்பின் வண்ணத்தையும் குறிப்பதாய் கருதப்படுகிறது. 
இந்த விழா, இடம் மாறி, உரு மாறி அமெரிக்கா சென்றது.  ஹல்லோவீன் (Halloween) என்ற பெயர் மாற்றம் பெற்றது.  மற்றவர்களைப் பயமுறுத்தி விளையாடுவது, பலவிதமான மாறுவேடங்கள் அணிவது, மாறுவேட விருந்துகளில் கலந்து கொள்வது, சொக்கப்பனை கொளுத்துவது, பயமுறுத்தும் கதைகளைப் படிப்பது, பயமுறுத்தும் படங்களைப் பார்ப்பது ஆகியவை இப்பொழுது இந்தக் கொண்டாட்ட நாளில் இடம்பெறுகின்றன.  சிறுவர் சிறுமியர் மாறுவேடமணிந்து வீடு வீடாகச் செல்வர். பரிசு தருகிறீர்களா அல்லது தந்திரம் செய்யட்டுமா (Trick or Treat) என்று கேட்பர். வீட்டில் இருப்பவர்கள் மிட்டாய் அல்லது வேறு ஏதேனும் பணம் கொடுத்து அனுப்புவார்கள்.  [ஆனால், யாரும் தந்திரம் செய்து காட்டுவதாக நமக்குத் தெரியவில்லை.]
செம்மஞ்சள் மற்றும் கருமை ஆகிய இருவண்ணங்கள் இந்தக் கொண்டாட்டத்துடன் தொடர்புடையது என்று குறிப்பிடிருந்தோமா... அதனால் தான் செம்மஞ்சள் நிறமான பூசணி, மற்றும் கறுப்புப் பூனை தற்போது ஹல்லோவீனுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன.
ஹாலிவூட் படங்களின் தாக்கம், உலகமயமாக்கலில் அந்நிய கலாச்சாரம் மெதுமெதுவாகப் புகுதல், எப்பொழுதும் வேடிக்கையை விரும்பும் ஆஸ்திரேலிய கலாச்சாரம் என்பன ஹல்லோவீன் இந்நாட்டிற்கு வருவதற்கு வழி வகுத்துள்ளன.
மாறு வேடம் பூண்டு விட்டீர்களா.... இல்லை, பரிசுப் பொருளுடன் காத்திருக்கிறீர்களா?
Share
