ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரியவர்கள், நிரந்தர பாதுகாப்பு விசா பெறுவதற்கான காலக்கெடுவை தவறவிட வேண்டும் என்பதற்காக, அவர்ளுக்கான பாதுகாப்பு பரிசோதனைகளை வேண்டுமென்றே தாமதப்படுத்துமாறு, ASIO எனப்படும் ஆஸ்திரேலிய புலனாய்வு அமைப்பிடம், கடந்த 2013-ல் முன்னாள் குடிவரவு அமைச்சர் Scott Morrison கோரியிருந்ததாக, ABC ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இவ்வாறு நிரந்தர பாதுகாப்பு விசா பெறுவதற்கான காலக்கெடுவை தவறவிடச் செய்வதன் மூலம், அவர்களுக்கு நிரந்தர விசாவுக்கு பதிலாக, அரசு புதிதாக அறிமுகப்படுத்திய 3 வருட தற்காலிக விசாவை வழங்குவதுடன், பல புகலிடக்கோரிக்கையாளர்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தரமாக வாழ்வதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்வதே, முன்னாள் குடிவரவு அமைச்சரின் நோக்கம் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
எனினும் குடிவரவு அமைச்சரின் இக்கோரிக்கைக்கு ASIO செவி சாய்த்ததா இல்லையா என்பதில் தெளிவின்மை காணப்படுகின்றது.
இதேவேளை ஒரு குடிவரவு அமைச்சராக, நாட்டின் தேசிய பாதுகாப்பை பேணுவதற்கான நடவடிக்கைகளுக்கே தாம் முதலிடம் கொடுத்ததாக, Scott Morrison இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அதேநேரம் Scott Morrison அவர்களுக்கு தமது ஆதரவினை வெளிப்படுத்தியுள்ள பிரதமர் Malcolm Turnbull, முன்னாள் குடிவரவு அமைச்சர் Scott Morrison, ஆஸ்திரேலியா நோக்கிய படகுப் பயணங்களை நிறுத்தியவர் என புகழாரம் சூட்டியுள்ளார்.
Share
