SKIP TO MAIN CONTENT

அகதிகளின் மேன்முறையீட்டு வழக்கு செலவு அதிகரிப்பு! நல அமைப்புக்கள் அதிர்ச்சி!!

Protesters gather to support asylum seekers detained at the Kangaroo Point Central Hotel.
Protesters gather to support asylum seekers detained at the Kangaroo Point Central Hotel. Source: AAP

1 min read

Published


Skip to article content

ஆஸ்திரேலியாவின் Federal Circuit Court -க்கு மேன்முறையீடு செய்யும் வழக்குச்செலவினை அரசாங்கம் அதிகரித்திருப்பது தொடர்பில் அகதிகள் நல அமைப்புக்கள் மற்றும் அகதிகளுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் அமைப்புக்கள் ஆச்சரியமும் கவலையும் தெரிவித்துள்ளன.

அதிகரித்திருக்கும் இந்த வழக்கு செலவானது அகதிகளுக்கும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கும் பாதகமான முடிவு என்று அந்த அமைப்பினர் கருத்து தெரிவித்துள்ளார்கள்.

ஆஸ்திரேலியாவின் உச்ச நீதிமன்றம் மற்றும் குடும்ப நீதிமன்றம் ஆகியவற்றுக்கு கொண்டுசெல்லப்படுகின்ற வழக்கு சுமைகளை குறைப்பதற்காக, சிக்கல்கள் குறைந்த வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்கும் பணியை Federal Circuit Court மேற்கொண்டுவருகிறது.

சுமார் 90 சதவீதமான குடிவரவு விவகாரம் தொடர்பான வழக்குகள் Federal Circuit Court-க்கு கொண்டுசெல்லப்படுகின்றன. குடிவரவு அமைச்சர்,  Immigration Assessment Authority மற்றும் Administrative Appeals Tribunal (AAT) ஆகியவற்றின் முடிவுகள் தொடர்பாக மேன் முறையீடு செய்யப்படும் வழக்குகளை Federal Circuit Court விசாரணை செய்கிறது.

இவ்வாறு மேன்முறையீடு செய்யப்படும் வழக்குகளுக்கான செலவே தற்போது 690 டொலரிலிருந்து 3330 டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு செலவு அதிகரிப்பு குறித்து சட்ட மா அதிபர் திணைக்கள பேச்சாளர் காரணம் கூறும்போது - Federal Circuit Court-இல் ஏற்கனவே தேங்கியுள்ள வழக்குகளை வேகமாக நடத்துவதற்கு நான்கு மேலதிக நீதிவான்கள், ஏழு பதிவாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களை பணியமர்த்துவதற்கும், வருடமொன்றுக்கு மேலதிகமாக ஆயிரம் வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கும் வழக்குச்செலவு அதிகரிப்பின் மூலம் பெற்றுக்கொள்ளப்படப்போகும் நிதி பயன்படுத்தப்படவுள்ளது- என்று கூறியுள்ளார்.

2014 - 2015 காலப்பகுதியில் Federal Circuit Court-க்கு இவ்வாறு கொண்டுசெல்லப்பட்ட 3544 என்ற வழக்குகளின் எண்ணிக்கை 2019 - 2020 இல் 6555 என்ற எண்ணிக்கைக்கு அதிகரித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now