SKIP TO MAIN CONTENT

மெல்பேர்னில் தமிழ் இளைஞரை மோதியவர் விடுதலைக்காக நீதிபதியிடம் மன்றாட்டம்!

Ajith
Judeland Antony suffered a broken pelvis and hand and serious spinal cord injury after being struck while crossing Bourke St on Tuesday. Source: Facebook

2 min read

Published

Updated

Presented by Renuka



Skip to article content

பதினாறு வயதில் பெற்றோரை இழந்து, அதன் பின்னர் போதைப்பொருளுக்கு அடிமையாகி குழப்பமான வாழ்வோடு போராடிக்கொண்டிருக்கும் இளைஞனின் மனநிலை கருதி, அவரை சிறையிலடைக்காமல் சமூக சீர்திருத்த பணியில் ஈடுபடும் வகையில் தண்டனை வழங்கி விடுவிக்கவேண்டும் என்று மெல்பேர்னில் கடந்த மாதம் சக்கர நாற்காலியுடன் தமிழ் இளைஞனை மோதிவிட்டு தப்பிச்சென்றவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

விசேட தேவைக்குட்பட்ட தமிழ் இளைஞனை வாகனத்தினால் மோதிவிட்டு அந்த இடத்திலிருந்து தப்பிச்சென்ற 23 வயது இளைஞன், சம்பவம் இடம்பெற்று ஆறு நாட்களுக்கு பின்னர் பொலீஸில் சரணடைந்திருந்தார்.

அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு கடந்த மூன்று வாரங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

நேற்றைய தினம், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சிறையிலிருந்தபடி காணொளி மூலம் விசாரணைகளுக்கு முகங்கொடுத்த குறித்த இளைஞன், தான் குற்றத்தை ஒப்புக்கொண்டால் சிறையிலிருந்து விடுதலை கிடைக்குமா என்று தனது சட்டத்தரணி ஊடாக கேள்வி எழுப்பினார்.

அதேநேரம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள  நபர் விபத்தினை ஏற்படுத்துவதற்கு 12 மணி நேரத்துக்கு முன்னரும் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன என்று நீதிமன்றில் பொலீஸார் தெரிவித்தனர்.

எனினும் நடந்த சம்பவத்துக்கு தான் உண்மையிலேயே மனம் வருந்துவதாகவும் விபத்துக்கு தான் காரணமாகவிட்ட பதற்றத்திலேயே அந்த இடத்திலிருந்து தப்பிச்சென்றதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டவர் நீதிபதியிடம் எடுத்துக்கூறினார்.

குறிப்பிட்ட சம்பவத்தின் பாரதூரத்தன்மையை கருத்திற்கொண்டு இந்த சம்பவம் தொடர்பான தண்டனையில் இறுக்கம் காண்பிக்கப்போவதாக கூறிய நீதிபதி, குறிப்பிட்ட நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டால் இரண்டு மாத சிறைத்தண்டனையும் சமூக சீர்திருத்த பணியில் ஈடுபடுவதற்கும் உத்தரவிடுவதற்கு தான் உத்தேசித்திருப்பதாக கூறினார்.

ஆனால் இவ்வழக்கு விசாரணையை ஒத்தி வைக்குமாறு அவரது தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அடுத்த நீதிமன்ற அமர்வில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர் பிணை அனுமதிக்கு விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விபத்துக்குள்ளான தமிழ் இளைஞர் Judeland Antony முதுகு மற்றும் இடக்கை எலும்புகளில் முறிவு ஏற்பட்டு படுகாயமடைந்த நிலையில் தற்போது குணமடைந்து வருகிறார்.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now