ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சு தடுப்புமுகாம்களிலிருந்த கிட்டத்தட்ட 10 ஆயிரம் புகலிடக்கோரிக்கையாளர்களின் விவரங்களை தவறுதலாக இணையத்தில் வெளியிட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய தடுப்புமுகாம்களிலுள்ளவர்கள் தொடர்பான அறிக்கையை தனது இணையத்தில் வெளியிட்ட உள்துறை அமைச்சு, தவறுதலாக தடுப்புமுகாம்களிலுள்ள சுமார் 9,258 பேரின் முழுப்பெயர், பிறந்ததிகதி, இடம், சொந்தநாடு, படகுப்பயண விபரம் உள்ளிட்டவற்றையும் வெளியிட்டிருந்தது.
உள்துறை அமைச்சின் தவறு சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து இவ்விபரங்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டிருந்தன.
எனினும் குறித்த 9,258 பேரின் விபரங்கள் இணையத்தில் 8 நாட்கள் காணப்பட்டதாகவும் இதன்மூலம் புகலிடக்கோரிக்கையாளர்களின் தனியுரிமை மீறப்பட்டதாகவும் தெரிவித்து கூட்டுவழக்கு தாக்கல்செய்யப்பட்டது.
இந்நிலையில் குறித்த விவகாரத்தை ஆராய்ந்த The Office of the Australian Information Commissioner (OAIC) உள்துறை அமைச்சின் இத்தவறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படவேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
இதன்படி சுமார் 1297 புகலிடக்கோரிக்கையாளர்கள் அரசிடமிருந்து நட்டஈட்டைப் பெறவுள்ளனர்.
தனிப்பட்ட விபரங்கள் கசியவிடப்பட்டதால் ஏற்பட்ட பாதிப்பின் தீவிரத்தன்மை அடிப்படையில் இவர்கள் ஒவ்வொருவருக்கும் 500 டொலர்களிலிருந்து 20 ஆயிரம் டொலர்கள்வரை நட்டஈடு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 9,258 பேரின் விபரங்கள் உள்துறை அமைச்சினால் வெளியிடப்பட்டிருந்தாலும் இவ்விவகாரத்தால் தமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் 1282 பேர் ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்றும், 6,679 பேர் இதுகுறித்த OAIC-இன் அறிவித்தலுக்கு பதிலளித்திருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
