நியூசிலாந்து கிறைஸ்ட்சேர்ச் மசூதியில் 51 பொதுமக்களை சுட்டுப்படுகொலை செய்த ஆஸ்திரேலியர் Brenton Tarrant, நியூசிலாந்தில் 2017ம் ஆண்டு குடியேறுவதற்கு முன்னர் இந்தியாவுக்கு நீண்டதொரு சுற்றுலாவை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
21 நவம்பர் 2015 முதல் 18 பெப்ரவரி 2016 வரையான காலப்பகுதியில் Brenton Tarrant இந்தியாவில் தங்கியிருந்ததாகவும், இக்காலப்பகுதியில் அவர் அங்கு என்ன செய்துகொண்டிருந்தார் என்பது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இதுதவிர குறிப்பிட்ட சம்பவம் இடம்பெறுவதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் தனது துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது அது தவறுதலாக வெடித்த சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபோதும் அந்த சம்பவம் தொடர்பாக வைத்தியசாலை நிர்வாகம் பொலீஸாருக்கு எந்த முறைப்பாடும் செய்திருக்கவில்லை என்ற தகவல் கிறைஸ்ட்சேர்ச் சம்பவம் தொடர்பான விரிவான விசாரணையில் தெரியவந்துள்ளது.
2018 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் Brenton Tarrant தனது துப்பாக்கியை சுத்தம் செய்யும்போது அது தவறுதலாக வெடித்ததில், கண் மற்றும் காலில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். காயங்களுக்கு சிகிச்சையளித்த பிறகு வைத்தியசாலை நிர்வாகம் அவரை வீட்டுக்கு அனுப்பியிருக்கிறது. Brenton Tarrant தங்கியிருந்த வீட்டு உரிமையாளர், குறிப்பிட்ட வெடிவிபத்தினால் சேதமடைந்த வீட்டினை சரிசெய்திருக்கிறார்.
ஆனால், இந்த விடயங்கள் எதுவும் பொலீஸாரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படவில்லை என்று கிறைஸ்ட்சேர்ச் மசூதி படுகொலை தொடர்பான 792 பக்க றோயல் கமிஷன் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Brenton Tarrant வெடிவிபத்தில் படுகாயமடைந்த நிலையில் சேர்க்கப்பட்ட வைத்தியசாலை நிர்வாக அதிகாரி, விசாரணையில் சாட்சியளிக்கும்போது கூறுகையில் - அப்போது நடைமுறையிலிருந்த சட்டத்தின் பிரகாரம் துப்பாக்கி வெடிவிபத்தினால் காயமடைந்த சம்பவம் குறித்து வைத்தியசாலை நிர்வாகம் பொலீஸாருக்கு அறிவிக்கவேண்டிய கடப்பாடிருக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
