DIY காயங்கள்
65 வயதிற்கும் மேற்பட்ட பல ஆண்கள், தாமாக ஏதாவது செய்ய விழையும்போது காயத்துக்குள்ளாகிறார்கள் (உதாரணமாக, ஏணிகள் மற்றும் கட்டிடங்களின் மேல் ஏறி வேலை செய்ய முற்படும்போது), மேலும், கருவிகள் மற்றும் இயந்திரங்களைப் பயன்படுத்தும் போது (உதாரணமாக - மின்சாரத்தில் இயங்கும் சிறு கருவிகள் மற்றும் புல்வெட்டும் இயந்திரம்).

Source: AIHW
பெண்கள் மற்றும் சிறுமிகள், காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது
பெண்களுக்கு எதிரான வன்முறைத் தாக்குதல்கள் தான் அவர்களை மருத்துவமனைக்கு அதிகளவில் அனுப்பியுள்ளது என்று AIHW ஆய்வு சொல்கிறது. 15-19 மற்றும் 50-54 வயதுடைய பெண்கள் தான் அதிகளவில் தாக்குதலுக்குள்ளாகிறார்கள். இதில் பாதிக்கும் மேற்பட்ட (59%) பெண்கள் கூர்மையான ஆய்தத்தால் குத்தப்பட்டிருக்கிறார்கள் அல்லது மழுங்கிய பொருட்களால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அதிகளவு காயங்கள் (63%) தலை மற்றும் கழுத்துப் பாகங்களில் இருந்தன. குற்றம் புரிபவர்கள் பாதிப் பேருக்கு மேல் (59%), தாக்கப்பட்டவரின் நெருங்கிய உறவினர் அல்லது நெருங்கிப் பழகியவர் என்பது கவலை தரும் செய்தி.

Source: AIHW
சுடுகலன் ஆயுதத்தால் ஏற்படும் காயங்கள் மற்றும் இறப்பு
ஒரு சுடுகலன் ஆயுதத்தால் இறந்தவர் மற்றும் காயப்பட்டவரை AIHW ஆராய்ந்த போது, 90% துப்பாக்கி தொடர்பான இறப்பு, ஆண்கள் மத்தியில் ஏற்பட்டது என்றும், துப்பாக்கிக் காயத்துக்குள்ளான மூன்றில் ஒருவர் (33%) வேண்டுமென்றே தாக்கப்பட்டார் என்றும், 79% இறப்புகள் சுயமாக மேற்கொள்ளப்பட்டவை என்றும் கண்டுபிடித்துள்ளது.

Source: AIHW
இரயில் அல்லது ட்ராம் ஏற்படுத்திய தீவிர காயம்
2009-10 இலிருந்து 2013-14 வரையான ஐந்து ஆண்டு காலத்தில் ஒரு ட்ராம் அல்லது இரயிலுடன் சம்பந்தப்பட்ட எதிர்பாராவிதமாக விபத்து காரணமாக கடுமையான காயத்துடன் 812 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இரயில் பாதையைக் கடக்கும் போது அடியுண்டவர் 178 பேர். சராசரியாக, வருடத்திற்கு 162 பேர் இரயில் விபத்திலும், 397 பேர் டிராம் சம்பந்தப்பட்ட விபத்திலும் மாட்டியிருக்கிறார்கள்.

Source: AIHW
நாய் ஏற்படுத்தும் காயங்கள்
இந்த நாட்டிலும் நாய்கள் காயம் ஏற்படுத்துமா? உங்களது செல்லப் பிராணியான நாய் எந்தத் தீங்கும் விளைவிக்காது என்று நீங்கள் நினைக்கலாம். 2013-14 ஆம் ஆண்டில், நாய் கடித்த 3,644 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதே காலப் பகுதியில், நாயினால் தாக்கப்பட்டவர்கள் 328 பேர். நாய் ஏற்படுத்திய காயங்களுக்காக மருத்துவமனை சென்றவர்களில், 9 வயதிற்குக் குறைந்த இளம் குழந்தைகள் (689 பேர், 17%) தான் அதிகம்.

Source: AIHW
இவற்றை விட, மேலும் பல காரணங்களும் உங்களுக்குத் தீங்கு விழைவிக்கலாம் அல்லது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லலாம். மேலே தரப்பட்ட விடயங்கள் சில சுவாரஸ்யமான தரவுகளைக் கொண்டிருந்தமையால், அவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.