நியூஸிலாந்து தவிர எந்த வெளிநாட்டுக்குமான பயணங்கள் இந்த வருடத்தில் சாத்தியமில்லை என்று அரசுத்தரப்பு தகவல்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது. இந்த தடை அடுத்த வருட ஆரம்பம்வரைகூட நீடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் தற்போது பேணப்பட்டுவருகின்ற சமூக ரீதியிலான தனிமைப்படுத்தும் கட்டுப்பாடுகள் சிறந்த பெறுபேறுகளை தந்துள்ளபோதும் வெளிநாட்டுப்பயணங்களுக்காக விமான நிலையங்களையோ துறைமுகங்களையோ திறப்பதில் அரசுக்கு உடன்பாடில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைக்கு டஸ்மேனிய மாநிலம் உட்பட உள்நாட்டின் ஏனைய மாநிலங்களுக்கான எல்லைகளை திறப்பதுடன் நியூஸிலாந்துக்குமான பயணங்களை மேற்கொள்வதற்கு நாட்டு மக்களை அனுமதிப்பதில் பிரச்சினை இல்லை என்று ஆஸ்திரேலிய அரசு கருதுகிறது.
கொரோனா தொற்று அபாயத்திலிருந்து மீள நியூஸிலாந்து அரசு மேற்கொண்ட கட்டுப்பாடுகள் அந்நாட்டில் சிறந்த பெறுபேறுகளை கொடுத்துள்ளன. நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை முற்றாக குறைந்து- flatten the curve- வளைவை கிடையாக்கும் தேசிய முன்னெடுப்பு - சிறந்த பலாபலனை கொடுத்திருக்கிறது. ஆகவே, அந்த நாட்டுக்கான பயணத்தினை ஆஸ்திரேலியர்கள் மேற்கொள்வதில் பயமில்லை என்று ஆஸ்திரேலிய அரசு கருதுவதாகவும், இது குறித்து அந்நாட்டு அரசுடன் பேச்சுக்கள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
அடுத்தடுத்த நாட்களில் ஆஸ்திரேலிய அரசுத்தரப்பு சுகாதர தரப்புடனும சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளுடனும் மேற்கொள்ளப்போகும் முக்கிய கலந்தாலோசனைகளின் அடிப்படையில் இந்த முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Share
