குடும்ப வன்முறை பற்றி முறைப்பாடு செய்தால் உங்கள் விசா பாதிக்கப்படுமா?

sbs
நாட்டில் குடும்ப வன்முறையென்பது மிகப்பெரிய பிரச்சினையாக தொடர்ந்தும் காணப்படுகின்றது.
Woman with a Black Eye
Woman with a Black Eye Source: Getty Images
ஐந்தில் ஒரு பெண் பாலியல் ரீதியான வன்முறைகளையும் மூன்றில் ஒரு பெண் உடல் ரீதியான வன்முறைகளையும் எதிர்கொண்டுள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளி விபரவியல் திணைக்களத்தின் 2012 தரவுகள் சொல்கின்றன.

இவர்களில் பல்கலாச்சாரப் பின்னணியைக் கொண்டவர்கள் குடும்ப வன்முறைக்கெதிரான உதவிகளைப் பெறுவதில் பல தடைகளை எதிர்கொள்கிவதாக குடும்ப வன்முறை தொடர்பில் ஆராயும் ஆணைக்குழு அண்மையில் கண்டறிந்திருந்தது.

குறிப்பாக சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டிருப்பது, மொழித் தடை மற்றும் விசா ரத்துச் செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவோம் என்ற அச்சம் போன்றவை இதற்கான முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுகின்றன.
Sad woman isolated from friends
Sad woman isolated from friends Source: Getty Images
குடும்ப வன்முறைக்கு யாரும் எப்போதும் உள்ளாகலாம் என்ற போதிலும் அகதிப் பின்னணி கொண்ட பெண்கள் இதற்கு அதிகம் ஆளாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அகதிப் பின்னணி கொண்ட பெண்களிடம் ஆஸ்திரேலியாவிலுள்ள சட்டதிட்டங்கள் பற்றிய முழுமையான விளக்கம் இல்லாததால் குடும்பவன்முறைக்கெதிராக முறைப்பாடுகளைச் செய்ய இவர்கள் அஞ்சுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உதாரணமாக போலந்திலிருந்து இங்கு குடிபெயர்ந்த போலினா என்ற பெண் 4 வருடங்களாக குடும்ப வன்முறையை அனுபவித்துக் கொண்டிருந்திருக்கிறார். தனது குடும்பத்தினருடன் கூட இவரால் தொடர்பு கொள்ள முடியவில்லை.
வருமானத்திற்காக கணவனிடம் தங்கியிருக்க வேண்டும். சிறிய மகள் இருப்பதால் வேலைக்கும் செல்ல முடியாது.
இங்கே நிரந்தர வதிவிடம் கிடையாது என்பதால் கணவனைப் பகைத்துக் கொண்டால் போலந்துக்குச் திரும்பிச் செல்ல நேரிடும், இதனால் மகளைப் பிரிய வேண்டுமெனப் பயம்.

போலினாவின் நிலையில் பல பெண்கள் இருக்கலாம். ஆனால் குடும்பவன்முறை சட்ட விதிகளின் கீழ் அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தேவையில்லை. கணவனை விட்டுப் பிரிந்தாலும் அவர்களது விசா செல்லுபடியாகும்.
You're way too good for him
You're way too good for him Source: Getty Images
சில பெண்கள் கலாச்சாரத்திற்கு கட்டுப்பட்டு வாழ வேண்டுமென நினைத்தோ அல்லது கணவனைப் பிரிந்தால் சமூகம் என்ன சொல்லும் என எண்ணியோ இந்த குடும்ப வன்முறை பற்றிப் பேசாமலிருக்கிறார்கள்.

ஆனால் குடும்ப வன்முறை எந்த வடிவத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது. எனவே நீங்கள் வன்முறைக்குள்ளாகிறீர்கள் என்றால் கவலை வேண்டாம். உங்களுக்கான உதவிகள் உள்ளன.
AAP
Source: AAP
அவசர உதவி தேவைப்படும் போது 000 வை அழைத்து உங்கள் பிரச்சினையைச் சொல்லுங்கள்.

அதேநேரம் உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் வன்முறைக்குள்ளாகினால் உங்களை இனங்காட்டிக் கொள்ளாமல் காவல்துறைக்கு தெரியப்படுத்துங்கள்.

குடும்ப வன்முறையிலிருந்து மீள்வதற்கான ஆலோசனையைப் பெற 1800 737 732  என்ற 24 மணி நேர சேவையைத் தொடர்பு கொண்டு நிபுணர் ஒருவரின் ஆலோசனையை பெறுங்கள். அல்லது www.1800respect.org.au  என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.

Women's Domestic Violence Crisis Service ஐ விக்டோரியாவில் வாழ்பவர்கள் 1800 015 188 என்ற இலக்கத்திலும் நியூ சவுத் வேல்ஸில் வாழ்பவர்கள் 1800 65 64 63 என்ற இலக்கத்திலும் தொடர்பு கொள்ளுங்கள்.

அதேபோன்று http://www.iwss.org.au/information-in-your-language/ இணையத்தளத்தில் பல மொழிகளில் தகவல்கள் கிடைக்கின்றன.
AAP
Source: AAP
இதுதவிர குடும்ப வன்முறைக்குள்ளாகும் பெண்களுக்கான ஆலோசனைகளையும் அவசர தங்குமிட வசதிகளையும் மாநில அரசுகள் வழங்குகின்றன.

ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தனியான தங்குமிட சேவைகள் இருந்தாலும் சிலநேரங்களில் இருவருக்கும் பொதுவான தங்குமிடங்களில் தங்கவேண்டி ஏற்படலாம். எனவே உங்கள் கலாச்சார பின்னணியைப் பொறுத்து அங்கு தங்குவதா இல்லையா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.


Share

Published

Updated

Presented by Renuka.T

Share this with family and friends


Follow SBS Tamil

Download our apps
SBS Audio
SBS On Demand

Listen to our podcasts
Independent news and stories connecting you to life in Australia and Tamil-speaking Australians.
Ease into the English language and Australian culture. We make learning English convenient, fun and practical.
Get the latest with our exclusive in-language podcasts on your favourite podcast apps.

Watch on SBS
Tamil News

Tamil News

Watch in onDemand