நாட்டு மக்களில் 16 வயது மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதுடையவர்களில் 76 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் Covid-19 தடுப்பூசியை முழுமையாகப் போட்டிருக்கிறார்கள்.
பரோபகாரர்கள் மற்றும் சில நிறுவனங்கள் வழங்கியுள்ள நிதியுடன் நாட்டில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கையை 80 சதவீதத்திற்கு மேல் உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டு Million Dollar Vax Australia என்ற திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக $4.1 மில்லியன்
மொத்தமாக 4.1 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள பரிசுகள் வழங்கும் இந்தத் திட்டத்தில் மிகப் பெரிய பரிசான ஒரு மில்லியன் (பத்து இலட்சம்) டொலர் பணத் தொகையைப் பரிசாக யார் பெறுகிறார் என்பது நவம்பர் 5ஆம் தேதி அறிவிக்கப்படும்.
இந்த மாதம் முழுவதும், நாள் ஒன்றிற்கு 1,000 மதிப்புள்ள பரிசு அட்டைகளும் குலுக்கல் முறையில் வழங்கப்பட்டு வந்தது.
அமெரிக்காவில் Ohio ‘Vax-A-Million’ என்ற பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்டு இந்த முயற்சி தொடங்கப்பட்டது.
அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்னர் முதலாவது சுற்றுத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டவர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
பரிசுகள் முழுமையாகத் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் வழங்கப்படும். ஆனால், அது குறித்து தடுப்பூசியின் ஒரு சுற்றை மட்டும் போட்டுள்ளவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால், பரிசுகள் டிசம்பர் 13ஆம் தேதிக்குப் பின்னர் தான் வழங்கப்படும். அக்டோபர் 31ஆம் தேதிக்கு முன்னர் முதலாவது சுற்று தடுப்பூசி போட்ட ஒருவர், டிசம்பர் மாதத்திற்கு முன்னர் தடுப்பூசியை முழுமையாகப் போட்டு விடுவார் எனவே, போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று கவலைப்பட தேவையில்லை.
தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைத்து மக்களும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம். உங்கள் பதிவை மேற்கொள்ள இந்த இணைப்பை சொடுக்கவும்.

Source: AAP
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.