முக்கிய விடயங்கள்
- NSW மாநிலத்தில் வாழ்பவர்களில் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் அனைவரும், அனைத்து ஃபெடரல் நாடாளுமன்ற, மாநில நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் வாக்களிப்பதற்கு பதிவு செய்ய வேண்டும்.
- ஆங்கிலம், மற்றும் இருபதுக்கும் மேற்பட்ட மொழிகளில் தேர்தல்கள் பற்றிய தகவல்களை NSW மாநில தேர்தல் ஆணையம் வழங்குகிறது.
- இணைய வழியாக வாக்களிக்கும் முறையான iVote இந்த தேர்தலில் பயன்படுத்த முடியாது.
தற்போதைய premier Dominic Perrottet தலைமையிலான, கூட்டணி அரசு தொடர்ச்சியாக நான்காவது தேர்தலில் வெற்றி பெற்று பதவியைத் தக்க வைக்க முயல்கிறது.
அதற்கு சவால் விடும் முக்கிய எதிர்க்கட்சியான Labor கட்சியைத் தலைமை தாங்கும் Chris Minns அவர்கள் 2021ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில்தான் இந்தப் பொறுப்பேற்றவர் என்பதால் முதல் முறையாக Premier பதவிக்குப் போட்டியிடுகிறார்.
NSW மாநில நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள் உள்ளன - பொதுவாக ‘கீழ் சபை’ என்று அறியப்படும் சட்டமன்றம் (Legislative Assembly) மற்றும் ‘மேல் சபை’ என்று அறியப்படும் சட்டசபை (Legislative Council).
NSW மாநிலத்திலுள்ள அனைத்து (93) மாநில தேர்தல் தொகுதிகளிலும் சட்டமன்ற (Legislative Assembly) தேர்தல் நடத்தப்படும். சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் அதிகபட்சம் நான்கு ஆண்டுகள்.
ஆனால், சட்டசபை உறுப்பினர்களின் பதவிக் காலம் அதிகபட்சம் எட்டு ஆண்டுகள். சட்டசபை (Legislative Council) 42 உறுப்பினர்களைக் கொண்டிருந்தாலும், பொதுவாக ஒவ்வொரு மாநிலத் தேர்தலிலும், 21 உறுப்பினர்கள் மட்டுமே தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
நேரடியாக வாக்குச் சாவடிக்குச் சென்று வாக்களிக்க முடியாதவர்கள் தபால் (அஞ்சல்) வாக்கெடுப்பிற்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்களாக இருக்கலாம்.
அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 20 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் NSW மாநில தேர்தல் ஆணையத்தை சென்றடைய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட வாக்குகள் மற்றும் அஞ்சல் வாக்களிக்கத் தகுதியை உறுதி செய்யும் சான்றிதழ்கள் ஏப்ரல் 6 ஆம் தேதி மாலை 6 மணிக்குப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

Chris Minns took on the NSW Labor leadership in June 2021. Source: AAP / BIANCA DE MARCHI/AAPIMAGE
தேர்தல் நாள் - மார்ச் 25ஆம் தேதி வாக்களித்தல்
NSW மாநிலம் முழுவதும் தேவாலயங்கள், பள்ளிகள், சமூக மையங்கள் என்று பல இடங்களில், மொத்தமாக 2,450ற்கும் மேற்பட்ட வாக்களிப்பு மையங்கள் இயங்கும்.
இந்த மையங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிக்கலாம்.
வாக்களிக்கும் மையத்திற்கு ஒரு வாக்காளர் சென்றதும், வாக்காளரது பெயர் மற்றும் முகவரி, எந்தத் தேர்தல் தொகுதி என்றும் வாக்காளர் ஏற்கனவே தேர்தலில் வாக்களித்திருக்கிறாரா என்றும் கடமையிலுள்ள ஒருவர் வாக்காளரைக் கேட்பார்.
வாக்காளரது விவரங்கள் உறுதி செய்யப்பட்டதும், வாக்காளருக்கு வாக்குச் சீட்டுகள் வழங்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் அந்த வாக்காளரின் விவரங்களைக் கடமையிலிருப்பவர்களால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், “declaration vote” என்ற செயல்முறையில் அவர் வாக்களிக்கலாம். அதற்கு, கடமையிலிருப்பவரின் சில கேள்விகளுக்குப் பதிலளித்த பின்னர், தரப்படும் படிவத்தில் வாக்களித்து விட்டு, இதற்கான சிறப்பு உறையில் இட்டு கடமையிலிருப்பவரிடம் கையளிக்க வேண்டும்.

NSW Premier Dominic Perrottet. Source: AAP / Bianca De Marchi
வாக்களிப்பது கட்டாயமாகும்
NSW மாநிலத்தில் வாழ்பவர்களில் வாக்களிக்க தகுதியுள்ளவர்கள் அனைவரும், அனைத்து ஃபெடரல் நாடாளுமன்ற, மாநில நாடாளுமன்ற மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களிலும் வாக்களிக்க வேண்டும்.
நீங்கள் வீடற்றவர், மாற்றுத் திறனாளி அல்லது தேர்தல் நாள் மாநிலத்தில் இல்லை என்றால்?
NSW மாநிலத்தில் நிலையான முகவரி இல்லாமல், அல்லது இடைக்காலத் தங்குமிடத்தில் வாழ்பவர்களும் வாக்காளர் பட்டியலில் சேர முடியும்.
அப்படியானவர்கள் வாக்களிக்க முடியாவிட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படாது.
மாற்றுத் திறனாளி வாக்காளர்களுக்கு உதவி தேவைப்பட்டால், அவர்களுக்கு உதவக்கூடிய ஒரு நண்பரை அல்லது உறவினரை அழைத்துச் சென்று வாக்களிக்கலாம், அல்லது தேர்தல் கடமையில் ஈடுபட்டிருக்கும் ஒருவரிடமிருந்து உதவி பெறலாம்.
நேரில் வாக்களிப்பது கடினம் என்றால், தேர்தல் நாளுக்கு முன்னரே வாக்களிக்கலாம், அல்லது அஞ்சல் மூலமோ தொலைபேசி மூலமோ வாக்களிப்பு செய்யலாம்.
தேர்தல் நாளன்று ஒருவர் மாநிலத்திற்கு வெளியே இருப்பார் என்றால், தேர்தல் நாளுக்கு முன்னரே வாக்களிக்கலாம் அல்லது அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியும்.
தகவல் பல மொழிகளில் கிடைக்கிறது
வாக்காளர் பட்டியலில் எப்படிச் சேர்வது, மற்றும் எப்படி வாக்களிப்பது பற்றிய அனைத்துத் தகவல்களையும், ஆங்கிலம் உட்பட 25 மொழிகளில் NSW மாநில தேர்தல் ஆணையம் வழங்குகிறது.
தேர்தல் நாளுக்கு முன்னர் மற்றும் தேர்தல் நாள் வாக்களிக்கும் நிலையங்களில் பன் மொழி பேசும் தேர்தல் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் கடமையில் இருப்பார்கள். எந்தெந்த மொழிகளை அவர்கள் பேச முடியும் என்பதை அடையாளம் காட்ட, அவர்கள் சட்டைகளில் அடையாளச் சின்னங்களை அவர்கள் அணிந்து கொண்டிருப்பார்கள்.
NSW மாநில தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் சேர்க்கப்படாத மொழிகளுக்கு இலவச தொலைபேசி மொழிபெயர்ப்பாளர் சேவை வழங்கப்படுகிறது.
மொழிபெயர்த்துரைப்பாளர் சேவை வழங்கும் Translating and Interpreting Service (TIS National) சேவையுடன் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தொடர்புகளை ஏற்படுத்தி வாக்காளர்களுக்குத் தேவையான மொழிபெயர்ப்பு சேவைகளைப் பெற்றுத் தர முடியும்.
மக்களிடையே தேர்தல்கள் குறித்த தவறான தகவல்கள் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்காகத் தேர்தல் ஆணையம் நடப்புகளையும் பதிவுகளையும் கண்காணித்து வருகிறது.
தேர்தலில் எவ்வாறு வாக்களிப்பது என்பது பற்றி மேலும் அறிய nsw.gov.au என்ற இணையத் தளத்திற்குச் செல்லவும், அல்லது 1300 135 736 என்ற இலக்கத்தை அழைக்கவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.