தேர்தல் முறையை நிர்வகிக்கும் சுயாதீன அமைப்பான AEC- ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம், வாக்களிக்கத் தகுதியுள்ள அனைத்து குடிமக்களுக்கும், பெடரல் அரசை வடிவமைக்க உதவும் வாய்ப்பை உறுதி செய்கிறது.
தேர்தல் நாளன்று ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையம், நாடு முழுவதும் உள்ள தங்கள் வாக்களிப்பு மையங்களில் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு மில்லியன் வாக்காளர்களை எதிர்பார்க்கிறது.
வாக்காளர் பட்டியலில் உள்ள அனைவரும் வாக்களிப்பது கட்டாயமாகும்.
நீங்கள் உங்களது தேர்தல் தொகுதியில் வாக்களிப்பதை உறுதிசெய்ய வேண்டுமென வலியுறுத்துகிறார் ஆஸ்திரேலிய தேர்தல் ஆணைய அதிகாரி ஜெஸ் லில்லி.

தேர்தல் நாளன்று பள்ளிகள், தேவாலய அரங்குகள் பொதுவான இடங்கள் என ஆயிரக்கணக்கான இடங்களில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்கிறது. உங்களுக்கு அருகிலுள்ள வாக்களிப்பு மையம் எது என்பதை AEC இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
வாக்களிப்பு மையங்களில் பல மொழிகளில் அறிவுறுத்தல்களையும் உதவிகளையும் வழங்குவதற்கான வசதி உள்ளதாக கூறுகிறார் ஆஸ்திரேலிய தேர்தல் ஆணையத்தின் Ekin-Smyth.
AEC Mobile voting குழுக்கள் முதியோர் பராமரிப்பு மையங்கள் மற்றும் தொலைதூர புறநகர்களுக்குச் சென்று வாக்குகளை சேகரிக்கின்றன.
அதேநேரம் தேர்தல் நாளில் வாக்களிப்பு மையத்திற்குச் செல்ல முடியாத வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களிக்கும் மையங்கள் அல்லது தபால் மூலம் வாக்களிக்கலாம்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான விவரங்களை AEC இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.
தேர்தல் நாளன்று நீங்கள் கோவிட் காரணமாக தனிமைப்படுத்தப்பட நேர்ந்தால், AEC இன் தொலைபேசி மூலமான வாக்களிப்பு சேவையைப் பயன்படுத்தலாம்.
அதேபோன்று நீங்கள் தேர்தல் நாளன்று வேறு மாநிலத்திற்கு பயணம் செய்யும் திட்டம் இருந்தால், முன்கூட்டியே தபால் மூலம் வாக்களிக்கலாம். அல்லது அந்தந்த மாநிலத்திலுள்ள வாக்களிப்பு மையமொன்றுக்குச் செல்லலாம்.
தேர்தல் தினத்தன்று அரசியல் கட்சிகள் வாக்குச் சாவடிகளுக்கு வெளியே வைத்து வாக்களிப்பு குறித்த தகவல்களை வழங்கக்கூடும் எனவும், இத்தகவல்கள் உங்களை தவறாக வழிநடத்த அனுமதிக்காதீர்கள் எனவும் எச்சரிக்கிறார் தேர்தல் ஆய்வாளர் William Bowe.
பெடரல் தேர்தலில் நீங்கள் உங்கள் உள்ளூர் பிரதிநிதியை தேர்ந்தெடுப்பதற்கு வாக்களிப்பீர்கள்.
நாடாளுமன்றத்தின் இரு சபைகளுக்கான அங்கத்தவர்களைத் தேர்ந்தெடுக்க, வாக்காளர்களுக்கு இரண்டு வாக்குச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன – பிரதிநிதிகள் சபைக்கான பச்சைநிற வாக்குச் சீட்டு, மற்றும் செனட் சபைக்கான வெள்ளைநிற வாக்குச் சீட்டு.
பிரதிநிதிகள் சபை அல்லது கீழ் சபை சபையில் தற்போது 151 இடங்கள் உள்ளன, இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேர்தல் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

பிரதிநிதிகள் சபையில் பெரும்பான்மையான இடங்களைப் பெறும் கட்சி அல்லது கட்சிகளின் கூட்டணி ஆட்சியமைக்கிறது, மேலும் அக்கட்சி அல்லது கூட்டணியின் தலைவர் பிரதமராகிறார்.
பிரதிநிதிகள் சபைக்கு வாக்களிக்க, பச்சைநிற வாக்குச் சீட்டில் உங்கள் முதல் விருப்புக்குரிய வேட்பாளருக்கருகில் ‘1’ என்றும் இரண்டாம் விருப்புக்குரிய வேட்பாளருக்கருகில் ‘2’ என்றும், இவ்வாறாக அனைத்து பெட்டிகளிலும் இலக்கமிட வேண்டும்.
செனட்டைப் பொறுத்தவரை வெள்ளைநிற வாக்குச் சீட்டில் கோட்டிற்கு மேலே அல்லது கோட்டிற்குக் கீழே நீங்கள் வாக்களிக்கலாம். உங்களுக்கு விருப்பமான வேட்பாளர்கள் அல்லது கட்சிகளுக்கு நீங்கள் இலக்கமிடவேண்டும்.
கோட்டிற்கு மேலே ஒவ்வொரு கட்சிக்கும் ஒன்று என்ற அடிப்படையில் பெட்டிகள் இருக்கும். கோட்டிற்கு கீழே ஒவ்வொரு வேட்பாளருக்குமென நிறைய பெட்டிகள் உள்ளன.
நீங்கள் வாக்களிப்பதற்கான விரைவான மற்றும் எளிமையான வழி, கோட்டிற்கு மேலே உள்ள கட்சிகளுக்கான பெட்டிகளில் ஆறைத் தேர்ந்தெடுத்து, உங்களது விருப்பத்தெரிவின் அடிப்படையில், ஒன்று முதல் ஆறு வரை இலக்கமிடுங்கள்.
நீங்கள் குறிப்பாக யாரேனும் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்றால், கோட்டிற்கு கீழே உள்ள பல பெட்டிகளில் நீங்கள் இலக்கமிடலாம். நீங்கள் கோட்டிற்கு கீழே வாக்களித் தீர்மானித்தால், ஆகக்குறைந்தது 12 பெட்டிகளில் இலக்கமிட வேண்டும்.

உங்கள் வாக்குச் சீட்டு சரியாகப் பூர்த்தி செய்யப்படாவிட்டால், அது ஒரு செல்லுபடியற்ற வாக்காக கருதப்படுவதுடன் அது வாக்கு எண்ணிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படமாட்டாது.
தகுந்த காரணம் எதுவுமின்றி வாக்களிக்கத் தவறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என்கிறார் ஆஸ்திரேலிய தேர்தல் ஆணைய அதிகாரி Ekin-Smyth.
எப்படி வாக்களிப்பது என்பது பற்றி மேலும் அறிய aec.gov.au க்கு செல்லவும். அல்லது 13 23 26 ஐ அழைக்கவும்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.