ஆஸ்திரேலியாவில் ஜுலை 2ம் திகதி ஃபெடரல் தேர்தல் நடைபெறவுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு ஆஸ்திரேலிய குடிமகனும் இத்தேர்தலில் வாக்களிக்க வேண்டுமென்பது கட்டாயமாகும்.
அந்தவகையில் நாடு முழுவதும் உள்ள வாக்களிக்கத் தகுதியான அனைவரும் தேர்தல் ஆணையகத்தில் தம்மைப் பதிவுசெய்திருக்க வேண்டும்.
அவ்வாறு பதிவு செய்து கொண்டவர்கள் தேர்தலில் வாக்களிக்கத் தவறினால் தண்டப்பணம் செலுத்த நேரிடும்.
நாடு முழுவதுமுள்ள 15.5 மில்லியன் பேர் இம்முறை தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தாலும் சுமார் ஒன்பதரை லட்சம் பேர் தம்மை வாக்காளர் பட்டியலில் இணைத்துக்கொள்ளத் தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை வாக்காளர் பட்டியலில் பதிவு செய்து கொண்டவர்களின் முகவரி அல்லது பெயர் விபரங்களில் மாற்றம் இருந்தால் அவற்றை உடனடியாக தேர்தல் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தி தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் 3 வருடங்கள் கடமையாற்றும் பிரதிநிதிகள் சபைக்கான உறுப்பினர்கள்(House of Representatives) மற்றும் 6 வருடங்கள் கடமையாற்றும் செனற் சபைக்கான உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான ஃபெடரல் தேர்தல் 3 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறுவது வழக்கம்.

People queue up with their enrolment forms at an Australian Electoral Commission office in Melbourne. Source: AAP
இம்முறை குறித்த காலத்திற்கு சற்று முன்னதாகவே Double-dissolution எனப்படும் இரட்டைக் கலைப்புத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இதன்படி நாடாளுமன்றத்தின் இரு சபைகளும் கலைக்கப்பட்டுள்ளதால் எதிர்வரும் ஜுலை 2ம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் 150 பிரதிநிதிகள் சபைக்கான உறுப்பினர்கள் மற்றும் 76 செனற் உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
ஆஸ்திரேலியா ஒரு தேசமாக உருவான 1901 ம் ஆண்டின் பின்னர் நடைபெறும் 7வது இரட்டைக் கலைப்புத் தேர்தல் இதுவாகும்.
தேர்தல் தினத்தன்று நாடு முழுவதும் அமைக்கப்படும் எட்டாயிரம் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் வாக்காளர்களிடம் இரு வாக்குச் சீட்டுகள் வழங்கப்படும்.

Source: AAP
பச்சை நிற வாக்குச் சீட்டு பிரதிநிதிகள் சபைக்கு (House of Representatives) உங்கள் தொகுதியிலிருந்து ஒருவரை தெரிவு செய்வதற்கானது. வெள்ளை நிற வாக்குச் சீட்டு செனற் சபைக்கு உங்கள் மாநிலத்திலிருந்து உறுப்பினரைத் தெரிவு செய்வதற்கானது.
விருப்பு வாக்கு முறைமையின்படி இவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
செனற் அவைக்கான வெள்ளை நிற வாக்குச் சீட்டில் வாக்களிப்பது சற்று வித்தியாசமானது.

Source: Getty Images/Gary Radler
வெள்ளை வாக்குச் சீட்டில் கோட்டின் மேல் கட்சிகளின் விருப்பு அடிப்படையிலும் கோட்டின் கீழ் வேட்பாளர்களின் விருப்பு அடிப்படையிலும் நீங்கள் இலக்கமிட வேண்டும்.
இதன்படி கோட்டின் மேலே ஆகக் குறைந்தது 6 பெட்டிகளில்இ அல்லது கோட்டின் கீழே ஆகக்குறைந்தது 12 பெட்டிகளில் நீங்கள் இலக்கமிட வேண்டும்.
தேர்தல் தினத்தன்று உங்களால் வாக்களிக்க இயலாது என்றால் இதற்கென முன்கூட்டியே அமைக்கப்படும் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று உங்கள் வாக்கினைப் பதிவு செய்யலாம். அல்லது தபால் மூலமாகவும் நீங்கள் வாக்களிக்கலாம்.
வெளிநாடுவாழ் வாக்காளர்கள் தமது வாக்குச்சீட்டினை தேர்தல் திணைக்களத்திற்கு தேர்தல் தினத்திற்கு முன்னதாகவோ அல்லது தேர்தல் தினத்தன்றோ கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.

Source: AAP
இதேவேளை வாக்குச்சீட்டில் தவறாக நிரப்பினீர்கள் என்றால் உங்கள் வாக்கு செல்லுபடியற்றதாகவே கருதப்படும்.
எனவே வாக்களிப்பதில் சந்தேகம் இருந்தால் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பவர்களிடம் உதவி பெறலாம்.
அதுமட்டுமல்லாமல் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையங்களின் வாயில்களில் நிற்கும் பல கட்சிகளின் அங்கத்தவர்கள் எவ்வாறு வாக்களிப்பதென்பதற்கான துண்டுப்பிரசுரங்களை உங்களிடம் தருவார்கள்.

Source: AAP
அதை வெறுமனே தகவல் வழிகாட்டியாக மட்டும் எடுத்துக்கொண்டு உங்களுக்குப் பிடித்த கட்சிக்கோ வேட்பாளருக்கோ வாக்களிக்க வேண்டும்.
இருப்பினும் மொழிப்பிரச்சினை இருப்பவர்கள் மொழிபெயர்ப்பு உதவியை தேர்தல் திணைக்களத்திடமிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
தேர்தல் தினத்தன்று கலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்களிப்பு நடைபெறும்.

Source: AAP
வாக்களிப்பு முடிவடைந்த பின்னர் வாக்குகள் எண்ணும் பணி தேர்தல் ஆணைக்குழுவால் மேற்கொள்ளப்பட்டு பிரதிநிதிகள் சபைக்கான (House of Representatives) முடிவுகள் அறிவிக்கப்படும்.
இதில் 75 ஆசனங்களுக்கு மேல் வெல்லும் கட்சி நாட்டில் ஆட்சியமைக்கும்.
அதேநேரம் செனற் சபைக்கான வாக்குகளை எண்ணும் பணி பல நாட்கள் இடம்பெற்று அதன் பின்னர் முடிவுகள் அறிவிக்கப்படும்.
தேர்தல் மற்றும் தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு www.aec.gov.au என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள். அல்லது 13 23 26 என்ற இலக்கத்தை அழையுங்கள்.