கொரோனா அச்சுறுத்தலிலிருந்து பாதுகாக்கும்வகையில், தடுப்புமுகாம்களிலுள்ள அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் உடனடியாக விடுவிக்கப்பட்டு சமூகத்தில் வாழ அனுமதிக்கப்படவேண்டுமென ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையர் Edward Santow தெரிவித்துள்ளார்.
ஒரே இடத்தில் பலர் செறிந்துவாழும் சூழல் காணப்படுவதால் கொரோனா பரவல் இலகுவாக நிகழக்கூடிய ஆபத்து இருப்பதுடன், social distancing-சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தடுப்புமுகாம்களில் கடைப்பிடிக்க இயலாத சூழ்நிலை காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டதையடுத்து அவர் இந்த அறிவுறுத்தலினை விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் சுமார் 1400 அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுப்புமுகாம்களிலும் தற்காலிகமாக ஏற்பாடு செய்யப்பட்ட இடங்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மெல்பேர்னிலும் பிரிஸ்பேர்னிலுமுள்ள தற்காலிக தடுப்புமையங்களிலுள்ளவர்கள் தம்மை சமூகத்தில்வாழ அனுமதிக்குமாறுகோரி தொடர்போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்தப்பின்னணியில் சிறிய இடங்களில் பலரைத் தங்கவைத்திருக்கும் நிலைமை மாற்றப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ள ஆஸ்திரேலிய மனிதஉரிமை ஆணையர் Edward Santow, பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் சமூகத்தடுப்பில் வைக்கப்பட்டால் அவர்களால் சமூக இடைவெளியைப் பேணமுடியும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் தடுப்புமுகாம்களிலுள்ள எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை எனத் தெரிவித்துள்ள உள்துறை அமைச்சு, எவருக்கேனும் அறிகுறிகள் தென்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.
மேலும் அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளுக்கமைய தடுப்புமுகாம்கள் மற்றும் தற்காலிக தடுப்புமையங்களின் சுகாதாரம் உயர்தரத்தில் பேணப்படுவதாகவும் உள்துறை அமைச்சு கூறியுள்ளது
Share
