ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியை மனிதர்களில் பரிசோதிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை மனிதர்களில் செலுத்தி பரிசோதிக்கும் நடைமுறை முதற்கட்டமாக மெல்பேர்ன் Alfred மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள அதேநேரம் பிரிஸ்பேர்னிலும் இப்பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
குறித்த சோதனை முயற்சியில் 18 வயதுக்கும் 59 வயதுக்கும் இடைப்பட்ட நல்ல உடல்நலத்தைக் கொண்டுள்ள 130 பேர் பங்கேற்கின்றனர்.
உலகளாவிய ரீதியில் இதுவரை ஆகக்குறைந்தது 10 கொரோனா தடுப்பூசி பரிசோதனைகள் மனிதர்கள்மீது மேற்கொள்ளப்பட்டுள்ளபோதிலும், தெற்கு அரைக்கோளத்தில் மனிதர்கள் மீது மேற்கொள்ளப்படும் முதலாவது சோதனை முயற்சி இதுவாகும்.
குறித்த சோதனை முயற்சியின் முதற்கட்ட முடிவுகள் எதிர்வரும் ஜுலை மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இம்முயற்சி வெற்றியளித்தால் இவ்வருட இறுதிக்குள் சுமார் 100 மில்லியன் தடுப்பூசிகளைத் தயாரிக்கமுடியும் என நோவாவேக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நோவாவேக்ஸ் மருந்து நிறுவனம் MERS, SARS, Ebola போன்ற நோய்களுக்கான புதிய தடுப்பூசிகளை தயாரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
