சமையலறை கத்தியினால் மனைவியை சரமாரியாக வெட்டிப்படுகொலை செய்த இலங்கைப் பின்னணி கொண்ட நபரை குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்திருக்கிறது பெர்த் நீதிமன்றம்.
சம்பவம் இடம்பெற்றபோது குற்றஞ்சாட்டப்பட்ட நபர் எது சரி - எது பிழை என்று முடிவெடுக்கமுடியாத மனநிலையிலிருந்தார் என்று பெர்த் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பில் காரணம் கூறியிருக்கிறார்.
2019, Feb 3ம் திகதி பெர்த் Balga பகுதியில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இலங்கையைச் சேர்ந்த Darshika Nilmini Kudaligama Withana(44) என்பவர் படுகொலை செய்யப்பட்டிருந்தார். அவரது கணவர் Upendra Ihalehewa(46) கொலைக்குற்றச்சாட்டில் பொலீஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
வேலையிலிருந்து களைப்போடு வந்த கணவருக்கு மசாஜ் கொடுத்துக்கொண்டிருந்தபோது திடீரென்று எழுந்த Upendra Ihalehewa மனைவியின் நெஞ்சு - கழுத்துபகுதிகளில் சமையலறை கத்தியினால் வெட்டிப்படுகொலை செய்திருக்கிறார்.
அவரைப்படுகொலை செய்த கணத்திற்கு சற்று முன்னர், தனது மனைவியின் முகம் பேய் போல தோன்றியதாகவும் தன்னை நோக்கி ஓடிவருவதுபோல தெரிந்ததாகவும் பின்னர் பொலீஸ் விசாரணையில் Upendra Ihalehewa கூறியிருக்கிறார்.
முன்பொரு தடவை, தனது மனைவி - "நீ இலங்கைக்கு வா, உன்னை எனது நண்பர்களை வைத்து கொலை செய்கிறேன்" - என்று மிரட்டியாதாகவும் Upendra Ihalehewa மேலும் கூறியிருக்கிறார்.
Upendra Ihalehewa பூரண குணமடையும்வரைக்கும் மனநல காப்பகத்தில் வைத்து சிகிச்சையளிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.
