ஆஸ்திரேலியாவுக்கு வர விரும்பும் குடிவரவாளர்களின் ஆங்கில அறிவை சோதனை செய்வதற்காக தற்போது நடைமுறையில் உள்ள IELTS (International English Language Testing System) என்ற பரீட்சை முறையில் மாற்றம் கொண்டுவரப்படவேண்டும் என்றும் தற்போது பின்பற்றப்படுகின்ற முறையானது இந்த பரீட்சையை நடத்துபவர்கள் இலாபமீட்டுவதற்காக பேணுகின்ற படிமுறையாகவே காணப்படுகிறது என்றும் கிறீன்ஸ் கட்சியில் போட்டியிடும் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட குயின்ஸ்லாந்து வேட்பாளர் Navdeep Singh கூறியுள்ளார்.
"ஆஸ்திரேலியாவுக்கு வர விரும்புகின்றவர்கள் இந்த நாடு ஒரு பல்கலாச்சார தேசம் என்ற வகையில் ஆங்கில அறிவைக்கொண்டிருக்கவேண்டும் என்பது மிகச்சரியானதொரு எதிர்பார்ப்பு. இந்த எதிர்பார்ப்பின் அடிப்படையில், குடிவரவாளர்கள் IELTS பரீட்சை எழுதவேண்டும் என்றும் அந்த பரீட்சையில் குறிப்பிட்ட மதிப்பெண்களை பெற்றுக்கொள்ளவேண்டும் என்றும் குடிவரவு விதிகள் கூறுகின்றன. அதில் எந்த தவறும் இல்லை”
"ஆனால், இந்த IELTS பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வருடங்களில் காலாவதியாகிவிடும் என்று கூறப்படுகின்றமையானது மிகவும் நகைச்சுவைக்குரியதொரு விடயம். ஆங்கிலம் எவ்வாறு காலாவதியாகும்?”
"ஆக, இந்தப்பரீட்சைக்கு தோற்றுபவர்கள் குடிவரவுத்தேவைக்காக மீண்டும் மீண்டும் பரீட்சையெழுதவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இதனால் பெருஞ்செலவு ஏற்படுகிறது" - என்று Navdeep Singh கூறியுள்ளார்.
உலகெங்கிலும் வருடமொன்றுக்கு 30 லட்சம் பேர் பரீட்சைக்கு தோற்றுகிறார்கள் என்பதும் IELTS நிறுவனத்தின் பங்காளி கம்பனியான IDP 2018 ஆம் ஆண்டு மாத்திரம் 487 மில்லியன் டொலர்களை வருமானமாக ஈட்டியுள்ளது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
