நியூசிலாந்து நாட்டின் புதிய பிரதமராக ஜெஸிண்டா ஆடர்ன் (Jacinda Ardern) பொறுப்பேற்க உள்ளார். அவரின் வயது 37 மட்டுமே. மிகவும் இளவயதில் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக பதவி ஏற்பவரும், அந்த நாட்டின் மூன்றாவது பெண் பிரதமரும் என்ற சாதனைகளை அவர் ஏற்படுத்துகிறார்.
கடந்த மாதம் நியூசிலாந்தில் நடைபெற்ற தேர்தலில் லேபர் கட்சி இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டபோதும் ஆளும் கட்சியான நேஷனல் கட்சிக்கு ஆட்சியமைக்கத் தேவையான இடம் கிடைக்காததால் தொங்கு நாடாளுமன்றம் அமைந்தது.
பல வார பேச்சுவார்த்தைக்குப் பின், சிறு கட்சியான New Zeland First கட்சி லேபர் கட்சிக்கு ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. இதையடுத்து, லேபர் கட்சியின் தலைவராக மூன்று மாதங்களுக்கு முன் பொறுப்பேற்றவரான ஜெஸிண்டா பிரதமராகிறார்.
கிரீன்ஸ் கட்சி ஆட்சியில் பங்கேற்காமல் வெளியிலிருந்து ஆதரவு தரும் என்று அறிவித்திருப்பதால் பெரும்பான்மையற்ற New Zeland First கட்சி - லேபர் கட்சி கூட்டணி அரசு அமையவுள்ளது.
New Zeland First கட்சி குடியேற்றவாசிகளின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும் என்ற கொள்கையை வலியுறுத்துவதால் எதிர்வரும் நாட்களில் குடியேற்றம் தொடர்பான கொள்கைகளை New Zeland அரசு கடுமையாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
