இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்புக்களில் வெடித்துச்சிதறிய தற்கொலைக்குண்டுதாரிகளில் ஒருவரும் ஆஸ்திரேலியாவில் கல்வி கற்றுச்சென்றவருமான Abdul Lathief Jameel Mohamed லண்டனில் படிக்கும்போது அங்கு சந்தித்த மத போதகரினால்தான் தீவிரவாதத்திற்குள் ஈர்க்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாக பிரித்தானிய பாதுகாப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி Daily Mail செய்தி வெளியிட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் கல்விகற்றுவிட்டு இலங்கை திரும்பியபோது Abdul Lathief Jameel Mohamed முற்று முழுதாக மாறியிருந்தார் என்று முன்னதாக அவரது சகோதரி செவ்வியளித்திருந்தார்.
ஆனால், இங்கிலாந்து பாதுகாப்பு வட்டாரங்கள் இது குறித்து தகவல் வெளியிடும்போது- லண்டனிலிருந்து இஸ்லாமிய தீவிரவாத இயக்கத்துக்கு ஆட்களை சேர்ப்பதற்குரிய போதனைகளை வழங்கி பலரை மூளைச்சலவை செய்தவராக கருதப்படும் Anjem Choudary என்பவரிடம் சென்று வந்த காரணத்தினாலேயே Abdul Lathief Jameel Mohamed மிகப்பெரியளவில் மனம் மாறியிருக்கிறார் என்று கூறியுள்ளன.
சர்ச்சைக்குரிய மத போதகராக கருதப்படும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான Anjem Choudary தீவிரவாத கருத்துக்களை போதனை செய்து மனம் மாற்றுகிறார் என்ற குற்றத்தின் பேரில் ஐந்தரை வருடங்கள் சிறையில் தள்ளப்பட்டவர். இவரது போதனைகளை கேட்டு தீவிரவாத சிந்தனைக்குள் ஈர்க்கப்பட்டவர்கள் பல்வேறு தாக்குதல்களில் ஈடுபட்டதாக குறிப்பிடப்படுகிறது.
ஈஸ்டர் குண்டுவெடிப்புக்களில் வெடித்துச்சிதறிய தற்கொலைக்குண்டுதாரிகளில் ஒருவரான Abdul Lathief Jameel Mohamed, தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சென்று தாக்குதல் நடத்துவதற்கு முயற்சிசெய்தபோதும் அது கைகூடாமல்போக, தெஹிவளவிலுள்ள விடுதிக்கு வந்து அங்கு வெடித்து சிதறியிருந்தார்.
ஆஸ்திரேலியாவில் Swinburne பல்கலைக்கழகத்தில் கல்விகற்ற தனது மனைவியுடன் மெல்பனில் தங்கியிருந்துவிட்டு 2014 ஆம் ஆண்டு இலங்கைக்கு திரும்பியிருந்தார் என்று ஆஸ்திரேலிய வட்டாரங்கள் முன்னர் குறிப்பிட்டிருந்தமை தெரிந்ததே.
