இலங்கை மாணவர் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் மாட்டிவிட்டார் என்று நம்பப்படும் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவுஜாவின் சகோதரர் Arsalan Khawaja சிட்னி பொலீஸாரால் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண் விவகாரமொன்றில் இலங்கை மாணவரை வேண்டுமென்றே மாட்டிவிட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலும் பயங்கரவாதக்குற்றச்சாட்டுக்களை புனைந்தார் என்ற குற்ச்சாட்டின்பேரிலும் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த Arsalan Khawaja, பிணை நிபந்தனைகளுக்கு மாறாக எதிர்த்தரப்பு சாட்சியங்களுடன் தொடர்புகொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மாணவர் நிஸாம்தீனை பயங்கரவாத குற்றச்சாட்டில் மாட்டிவிடுவதற்காக போலி ஆதாரங்கள் புனையப்பட்டு நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக அலுவலகத்தில் தடயங்களாக வைத்துவிட்டதன் மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் நிஸாம்தீன் கைது செய்யப்பட்டு, ஒரு மாதகாலமாக விசாரிக்கப்பட்டு பின்னர், அவருக்கு எதிரான வழக்கு வாபஸ் பெறப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
அதன்பின்னர், இந்த வழக்கின் பிரதான சூத்திரதாரி என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்ட Arsalan Khawaja, பூர்வாங்க விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகத்திற்கு நூறு மீற்றர் தொலைவெல்லைக்குள் போகக்கூடாது என்பதுடன் 50 ஆயிரம் டொலர் சரீரப்பிணையிலும் மேலும் சில நிபந்தனைகளுடனும் இவர் விடுவிக்கப்பட்டிருந்தார்.
ஆனால், கடந்த சில வாரங்களாக தனது எதிர்த்தரப்பு சாட்சியங்களோடு தொடர்புகொண்டு பொலீஸார் நடத்திவரும் விசாரணைகளில் செல்வாக்கு செலுத்த முயற்சிசெய்கிறார் என்ற குற்றச்சாட்டின் பேரில் Arsalan Khawaja தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
Arsalan Khawaja-வின் சகோதரர் உஸ்மான் கவுஜா மெல்பேர்னில் நடைபெற்றுவரும் Boxing Day டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் தற்போது விளையாடிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.