SKIP TO MAIN CONTENT

இலங்கை தாக்குதல்களின் எதிரொலி: முன்னாள் 'கொலைக்குழு தளபதி' மீண்டும் பணியில்- Daily FT

AAP
Sri Lankan Army soldiers secure the area around St. Anthony's Shrine after a blast in Colombo, Sri Lanka, Sunday, April 21, 2019. Source: AAP

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

இலங்கையில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு பொறுப்பான இரகசிய புலனாய்வுப்பிரிவுக்கு தலைமைதாங்கி செயற்பட்ட அதிகாரி அண்மையில் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுவெடிப்புக்களுக்கு பின்னர் மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டிருப்பதாக இலங்கை இராணுவ தளபதியை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகமான Daily FT செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட புலனாய்வுத்துறை தளபதி யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் பல்வேறு ஊடகவியலாளர்களை கடத்தி சித்திரவதை செய்து, அவர்கள் செய்திகளை பெற்றுக்கொண்ட மூலம் எது என்று விசாரித்தறியும் நடவடிக்கையில் முன்னர் ஈடுபட்டிருந்ததாகவும், சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் படுகொலையின் பின்னர் குறிப்பிட்ட அதிகாரி கைதாகி சிறைப்படுத்தப்பட்டிருந்ததாகவும் பின்னர் பிணையில் வெளிவந்திருந்ததாகவும் அந்த செய்தி மேலும் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட புலனாய்வுத்துறை தளபதியின் தலைமையில் இயங்கிய இரகசிய புலனாய்வுப்பிரிவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த காலத்தில் கலைக்கப்பட்டதாகவும் பின்னர் குறிப்பிட்ட அதிகாரிக்கு வெளிநாட்டு இராஜதந்திரி பதவி வழங்கப்படவிருந்ததாகவும் ஆட்சிமாற்றத்தையடுத்து அந்த திட்டம் நிறைவேறவில்லை என்றும் அந்த செய்தி மேலும் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு அச்சுறுத்தலையடுத்து குறிப்பிட்ட புலனாய்வுத்துறை அதிகாரி இலங்கை இராணுவத்தளபதியின் கீழ் அமைக்கப்பட்டுள்ள விசேட குழுவுடன் இணைக்கப்பட்டுள்ளமையை, இராணுவ தளபதி மகேஷ் சேனநாயக்க தொலைக்காட்சி செவ்வியொன்றில் ஒப்புக்கொண்டிருக்கிறார் என்று அந்த செய்தி மேலும் தெரிவித்துள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now