இலங்கையில் இடம்பெற்றுள்ள நூற்றுக்கணக்கான அப்பாவிப்பொதுமக்களின் படுகொலைக்கு இஸ்லாமிய தீவிரவாதிகளே காரணம் என்றும் ஆஸ்திரேலியா தொடர்ந்தும் முஸ்லிம் மக்களை நாட்டுக்குள் இறக்குமதி செய்துகொண்டிருந்தால் ஆஸ்திரேலியாவிலும் இந்த நிலையே உருவாகும் என்றும் ஆஸ்திரேலியாவின் சர்ச்சைக்குரிய செனட்டர் Fraser Anning தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் நேற்றைய தினம் சிறிலங்கா குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக அவர் கருத்து வெளியிடும்போது - உலகெங்கிலும் இஸ்லாமிய மக்கள் அதிக எண்ணிக்கையில் பெருகிச்செல்லும்போது அங்கெல்லாம் அவர்களது வன்முறை சம்பவங்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இலங்கையில் நடைபெற்றிருப்பவை கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள மிகப்பெரிய தாக்குல்களாகும். இவை இஸ்லாமிய தீவிரவாதிகளாலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இந்த தீவிரவாதத்திற்கு எங்கே உலக தலைவர்கள் கண்டனம் தெரிவிக்கட்டும் பார்க்கலாம்? எங்கே முட்டை வீசிய பையன்? துரோகத்தில் ஊறிப்போன அரசியல்வாதிகள், இஸ்லாமுக்கு தலை வணங்கி கிறிஸ்தவத்தை அழித்தொழிப்பதற்கு துணைபோகிறார்கள். நான் உங்களை எச்சரிக்கிறேன். நாங்கள் தொடர்ந்தும் முஸ்லிம்களை எங்களது நாட்டிற்குள் இறக்குமதி செய்துகொண்டேயிருப்போமானால், உங்களது பிள்ளைகளுக்கும் நாட்டு மக்களுக்கும் எதிர்காலத்தில் பாதுகாப்பு கிடைக்காது. எனது ஆலோசனையை கேட்டு தப்பித்துக்கொள்ளுங்கள். புறந்தள்ளுபவர்கள் மரணத்துக்குத்தான் முகங்கொடுக்கவேண்டிவரும் - என்று கூறியுள்ளார்.
முஸ்லிம் மக்கள் நாட்டுக்குள் உள்வாங்கப்படுவதற்கு எதிராக தொடர்ந்து குரல்கொடுத்துவரும் செனட்டர் Fraser Anning, கடந்த மாதம் இடம்பெற்ற நியூஸிலாந்து மசூதி சம்பவங்களுக்கு பிறகு தெரிவித்த கருத்தினால் சர்ச்சைக்குள்ளானார்.
மேலும் அவர் ஊடகவியலாளர்களுடன் சந்தித்துக்கொண்டிருந்தபோது அவர் மீது சிறுவன் ஒருவர் முட்டை அடித்தமை உலகளாவிய ரீதியில் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது.