ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தொடர் குண்டுவெடிப்புக்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 253 என்று அரசு அறிவித்துள்ளது. தாக்குதல் இடம்பெற்ற நாள் முதல் ஒவ்வொரு தினமும் காலையில் சாவு எண்ணிக்கை அதிகரித்துவருவதாக அறிவித்த எண்ணிக்கையின் பிரகாரம் நேற்று முன்தினம் 349 என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், நேற்று இரவு விடுக்கப்பட்ட அரசாங்க அறிவித்தலில், குண்டு வெடிப்புக்கள் இடம்பெற்றவுடன் வெடித்துச்சிதறிய உடல் பகுதிகளை பொறுக்கி எடுத்து பொருத்தியதில் எண்ணிக்கை கோளாறுகள் ஏற்பட்டுவிட்டதாகவும் இப்போது மீள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டபோது சரியான எண்ணிக்கை தெரியவந்திருப்பதாகவும் காரணம் கூறப்பட்டிருக்கிறது.
சர்வதேச ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இலங்கை அரசின் இந்த அறிவிப்பு பலத்த விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. ஏற்கனவே, மேற்படி தாக்குதல்கள் குறித்த புலனாய்வு தகவல் தொடர்பில் அசிரத்தையுடன் செயற்பட்டதாக பல்வேறு தரப்பிலிருந்தும் அரசு மீது விமர்சனங்கள் வந்துகொண்டிருந்த நிலையில், இப்போது சுகாதார தரப்பினரின் கீழ் இயங்கும் நிர்வாக அலகுகள் சாவெண்ணிக்கையை நாட்டு மக்களுக்கு அறிவிப்பதில் இவ்வளவுதூரம் கவனயீனமான இருந்துள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, நாடெங்கிலும் இடம்பெற்ற தாக்குதல்களில் காயமடைந்து வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்ட 485 பேரில் ஆறுபேர் மாத்திரமே உயிரிழந்தார்கள் என்றும் மருத்துவத்துறையினர் வழங்கிய உயர்தர சேவையே மிகுதி காயக்காரர்களை உயிராபத்தின்றி காப்பாற்றியதற்கு மூல காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
