மதத்தை துறந்த காரணத்துக்காக மரண தண்டனை வழங்கப்படலாம் என்ற அச்சத்தில் குடும்பத்துடன் இலங்கைக்கு விடுமுறையில் சென்றிருந்த சமயம் அங்கிருந்து ஹொங்கொங் நாட்டுக்கு தப்பிவந்து ஆஸ்திரேலியா வரவிருந்த இரண்டு சவுதி நாட்டு சகோதரிகள் தமக்கு அபயமளிக்குமாறு கோரி சர்வதேச நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாங்கள் சவுதிக்கு திருப்பி அனுப்பப்பட்டால் படுகொலை செய்யப்படலாம் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சவுதி இளம்பெண்ணொருவர் இவ்வாறு அபயம் கோரி வந்து கனடா அகதி அந்தஸ்து வழங்கியபின்னர் தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கிறது.
நாட்டை விட்டுத்தப்பி வந்த இரண்டு சகோதரிகளில் ஒருவர் தங்களது நிலை குறித்து கூறும்போது - மதத்தை துறந்தமைக்காக குடும்ப உறுப்பினர்களினால் வன்முறைகளுக்கு முகங்கொடுத்து வந்த தானும் தனது சகோதரியும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கடந்த இரண்டு வருடங்களாக திட்டமிட்டுவந்ததாகவும் தனது இளைய சகோதரி 18 வயதினை எட்டும்வரைக்கும் அனைத்து துயரங்களையும் பொறுத்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தங்களது குடும்பத்தினர் இலங்கைக்கு விடுறை செல்வதாக திட்டமிட்டதைத்தொடர்ந்து இரகசியமாக ஆஸ்திரேலியாவுக்கான விஸாவுக்கு விண்ணப்பம் செய்து தாங்கள் இருவருமே மெல்பேர்னுக்கு பயணம் செய்வதற்கு காத்திருந்ததாகவும் கடந்த செப்ரெம்பர் மாதம் ஆறாம் திகதி இரவு இலங்கைலிருந்து தங்களது குடும் உறுப்பினர்கள் யாருக்கும் தெரியாமல் டக்ஸியை பிடித்துக்கொண்டு விமானநிலையம் வந்து அங்கிருந்து ஹொங்கொங்கிற்கு தப்பி வந்ததாகவும் அவர் கூறினார். அங்கிருந்து ஆஸ்திரேலியா செல்லும் விமானத்துக்கு காத்திருந்தவேளை தங்களது கடவுச்சீட்டை சோதனை செய்த ஹொங்கொங் அதிகாரி ஒருவர் தங்களை அங்குள்ள சவுதி தூதரக அதிகாரி ஒருவரிடம் மாட்டிவிட்டதாகவும் அதனைத்தொடர்ந்து அங்கிருந்து தாங்கள் இருவரும் 13 இடங்களுக்கு மாறி மாறி ஓடிச்சென்று பதுங்கி வாழ்ந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் இவர்களுடைய தந்தையர் விடயத்தை கேள்வியுற்று ஹொங்கொங்கிற்கு இவர்களை தேடி வந்ததாகவும் ஆனால், சகோதரிகள் இருவரும் தந்தையை சந்திக்க மறுத்துவிட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
தற்போது தங்களது சட்டத்தரணி ஊடாக ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியுள்ள இரண்டு சகோதரிகளும் தங்களை மீண்டும் சவுதிக்கு அனுப்புவதிலிருந்து காப்பாறுமாறும் தாங்கள் திருப்பி அனுப்பப்பட்டால் ஊடகவியலாளர் ஜமால் கஸோஜிக்கு நடந்த கதிதான் தம்கும் ஏற்படும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.
