இலங்கையில் முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள வன்முறைகள் குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள ஐக்கியநாடுகள் சபையின் இரு உயர் அதிகாரிகள், இந்த சம்பவங்களை உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவராவிட்டால் அமைதியற்ற சூழல் மேலும் விரிவடைந்து செல்வதற்கான வாய்ப்புக்களே அதிகம் என்று கூறியிருக்கின்றனர்.
கடந்த சில நாட்களாகவே தென்னிலங்கையில் குருணாகல் பகுதியில் ஆரம்பித்து நீர்கொழும்பு மற்றும் ஏனைய பிரதேசங்களில் முஸ்லிம் சமூகத்தவர்களுக்கு எதிராகவும் அவர்களது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் வகையிலும் தொடர் வன்முறைகள் இடம்பெற்றுவருகின்றன.
இவற்றைக்கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு தரப்பினர் ஊரடங்கு சட்டத்தினை நடைமுறைப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால், நேற்றைய சம்பவங்களில் பெருமளவான சொத்துக்கள் நாசமாக்கப்பட்டுள்ளன, ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. இனந்தெரியாதவர்களின் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐக்கியநாடுகள் சபையின் Adama Dieng(Special Adviser on the Prevention of Genocide) மற்றும் Karen Smith(Special Adviser on the Responsibility to Protect) ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கும்போது - இனங்களுக்கு இடையிலான அமைதியை பேணுவதற்கு சமூக, சமய, சிவில் அமைப்புக்கள் அனைத்தும் இணைந்து செயற்படவேண்டும். வெறுப்புடன் மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல்களை உடன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும். இனங்களுக்கு இடையிலான பிணக்குகளிருந்து தங்களை மீட்டெடுத்துக்கொண்டு முன்னோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் நாடு தற்போது இடம்பெற்றுவரும் சம்பவங்களினால் நிச்சயம் பின்னோக்கி தள்ளப்படும்" - என்று குறிப்பிட்டுள்ளனர்.
