SKIP TO MAIN CONTENT

இலங்கையில் ஊரடங்கு உத்தரவு தளர்வு! விடுமுறையை முடித்துக்கொண்டு நாடு திரும்பினார் மைத்திரி!

Security forces outside St. Anthony's Shrine in Colombo
Source: AAP

2 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

இலங்கையில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டதாக பொலீஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தனிப்பட்ட சுற்றுலாவை மேற்கொண்டு வெளிநாடு போயிருந்த இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அதிகாலை நாடு திரும்பியுள்ளார்.

கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் நேற்று ஏற்பட்ட அசம்பாவிதங்களை அடுத்து சிங்கப்பூரிலிருந்தவாறு சம்பந்தப்பட்ட தரப்புக்குடன் பேசி நடவடிக்கைகளை மேற்கொண்ட ஜனாதிபதி, முப்படைகளின் தளபதி என்ற வகையில் முக்கியமான முடிவுகளை சம்பந்தப்பட்டவர்களுடன் விசேட தொடர்பாடல்களின் ஊடாக அனுப்பியிருந்தார் என்று கூறப்படுகிறது.

நேற்று இடம்பெற்ற தாக்குதல்கள் குறித்து இலங்கையின் பாதுகாப்பு உயர்மட்டத்தினருக்கு இந்த மாத ஆரம்பத்திலேயே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால், அது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் பலத்த விமர்சனங்கள் உலகெங்கிலுமிருந்து கிளம்பியுள்ள நிலையில் முப்படைகளின் தளபதி என்ற வகையில் மைத்திரியின் பதில் என்ன என்பது தற்போது எதிர்பார்ப்புக்கு உள்ளாகியுள்ளது.

ஜனாதிபதி நாட்டில் இல்லாதபோது பொறுப்புள்ள அடுத்த தலைவர் என்ற வகையில் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஊடகவியலாளர்கள் கேள்விகளால் துளைத்தெடுத்தபோது - தாக்குதல்கள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை குறித்து மாத்திரமல்லாமல் நாட்டின் பாதுகாப்பு குறித்து கடந்த ஆறு மாதங்களாக தனக்கு எதுவுமே தெரியாது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

கடந்த வருடம் ஒக்டோர் மாதம் சட்டவிரோதமாக மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்த சர்ச்சையை அடுத்து - கடந்த ஆறு மாதங்களாக - தன்னை பாதுகாப்பு கவுன்ஸில் கூட்டங்களுக்கு அழைப்பதில்லை என்றும் நாட்டின் பாதுகாப்பு நிலைவரங்களில் என்ன தகவல்கள் யாருடன் பரிமாறப்படுகிறது என்பது குறித்தெல்லாம் தனக்கு எதுவுமே தெரியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

பிரதமர் ரணிலும் வேறு தரப்புக்களும் சேர்ந்து தன்னை கொலை செய்ய திட்டமிட்டிருந்தார்கள் என்று ஜனாதிபதி மைத்திரி முன்னர் குற்றஞ்சாட்டியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now