தமிழகத்திலிருந்து களமிறங்கிய ஐந்து தமிழ் இலக்கியவாதிகளும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் அமோவெற்றியீட்டியுள்ளர்.
ஐவரும் தி.மு.க. கூட்டணி சார்பில் இந்தவெற்றியை பெற்றுக்கொண்டதன் மூலம் அந்தக்கூட்டணிக்கு பெரும்பலத்தை சேர்த்துள்ளார்கள்.
திமுக சார்பில் கனிமொழி, கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சு.வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ரவிக்குமார், காங்கிரஸ் சார்பில் ஜோதிமணி ஆகியோரே இவ்வாறு வெற்றிவாகை சூடியிருப்பவர்கள் ஆவர்.
தூத்துக்குடித்தொகுதியில் போட்டியிட்டு அபார வெற்றியீட்டியுள்ள கனிமொழி ஒரு கவிஞர். அரசியலில் தீவிரமாக இயங்கிவருகின்றபோதும் அவ்வப்போது இலக்கிய மேடைகளில் தோன்றி தனது படைப்புக்களையும் விமர்சனங்களையும் முன்வைப்பவர். கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி ஆகிய கவிதைத்தொகுப்புக்களை வெளியிட்டவர்.
தென்சென்னை தொகுதி திமுக வேட்பாளராக தேர்தல் அரசியலில் முதல் முறையாக களம்புகுந்த தமிழச்சி தங்க பாண்டியன் கன்னிவெற்றியை கட்சியுடன் பகிர்ந்திருக்கிறார். இவர் எஞ்சோட்டுப் பெண், வனப்பேச்சி, பேச்சரவம் கேட்டிலையோ, மஞ்சணத்தி உள்ளிட்ட கவிதை நூல்களையும் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அரசியல் பாரம்பரியம்கொண்ட இவர் ஏற்கெனவே அத்தொகுதியில் எம்.பி.யாக இருந்த அமைச்சர் ஜெயக்குமாரின் மகன் ஜெயவர்த்தனை எதிர்த்துப் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பாக மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றிருக்கிறார் எழுத்தாளர் சு.வெங்கடேசன். காவல் கோட்டம் என்ற தனது முதல் நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற சு.வெங்கடேசன் வேள்பாரி, வைகை நதி நாகரிகம் என வரலாற்று நூல்களையும் எழுதியவர்.
விழுப்புரம் தொகுதியில் திமுக சின்னத்தின் கீழ் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் ரவிக்குமாரும் அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றிருக்கிறார். தலித்தியம், ஈழம், பெண்ணியம், சூழலியல் என பரவலாக பல கட்டுரைத் தொகுப்பு நூல்களையும் உலக சிந்தனையாளர்கள் பலரின் நூல் மொழிபெயர்ப்புகளையும் வெளியிட்டிருக்கிறார். 'மணற்கேணி" ஆய்விதழை நடத்தி வருபவர்.
கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்பட்ட ஜோதிமணி ஏற்கெனவே "சித்திரக்கூடு" என்ற நாவலும் 'ஒற்றைவாசனை' என்ற சிறுகதைத்தொகுப்பும் 'நீர் பிறக்கும்" முன் என்ற தன்னனுபவப் பகிர்வு நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். நீண்ட காலமாக தீவிர அரசியலில் இருந்து வருகிறார். இவர் ஏற்கெனவே அத்தொகுதி எம்.பி.யாகவும் மக்களவை துணை சபாநாயகராகவும் இருந்த தம்பிதுரையை தோற்கடித்து அமோக வெற்றியீட்டியிருக்கிறார்.
