SKIP TO MAIN CONTENT

இந்திய மக்களவைத் தேர்தல்: வெற்றியின் விளிம்பில் பா.ஜ.க கூட்டணி!

Indian Elections 2019
Source: AAP Image/ EPA/HARISH TYAGI

1 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் பா.ஜ.க கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் முன்னணி பெற்றுள்ளது.

இதுவரை வெளியான முடிவுகளின்படி மொத்தமுள்ள 543 இடங்களில் சுமார் 340 இடங்களில் பிரதமர் மோடி, அமித் ஷா தலைமையில் போட்டியிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ள அதேநேரம் காங்கிரஸ் கூட்டணி 93 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதரகட்சிகள் 109 இடங்களைப் பெறும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதன்மூலம் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சியமைப்பதற்கான வாய்ப்பு அமைந்துள்ளது.

இதையடுத்து பல்வேறு தரப்பினரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.

அதேநேரம் தனது வெற்றிதொடர்பில் டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ள மோடி அவர்கள் அனைவரும் இணைந்து வலிமையான இந்தியாவை உருவாக்குவோம் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட திமுக பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதுவரை வெளியான முடிவுகளின்படி திமுக 38 இடங்களையும் அதிமுக ஒரு இடத்தையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. இதில் 7 ஆயிரத்து 928 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் சுமார் 60 கோடி வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுஒருபுறமிருக்க தமிழக இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன.

தற்போதைய நிலவரப்படி தி.மு.க 13 இடங்களிலும் அ.தி.மு.க 9 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இதன்மூலம் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கவிழ்வதற்கான வாய்ப்பு அரிதாகவே காணப்படுவதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now