SKIP TO MAIN CONTENT

இந்திய நடிகைக்கு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட அதிர்ச்சி! மூவர் கைது!!

Isha Sharvani
Isha Sharvani Source: Instagram

1 min read

Published


Skip to article content

ஆஸ்திரேலியாவில் வசித்துவரும் பிரபல பொலிவூட் நடிகையிடம் ATO-வரித்திணைக்களத்திலிருந்து பேசுவதாக தொலைபேசியில் தொடர்புகொண்டு சுமார் ஐயாயிரத்து 700 டொலர் பணத்தை சுருட்டிய இந்திய ஆசாமிகளை டில்லி பொலீஸார் கைது செய்துள்ளனர்.

'கிஸ்னா" என்ற ஹிந்தி திரைப்படத்தில் பிரபல நட்சத்திரம் விவேக் ஒபராயுடன் அறிமுகமானவரும் தமிழில் 'மாற்றான்" படத்தில் 'தீயே தீயே" பாடலில் தோன்றி நடித்தவருமான ஈஷா ஷர்வானி தற்போது பேர்த்தில் வசித்துவருகிறார்.

இவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்ட நபர் ஒருவர் தன்னை ஆஸ்திரேலிய வரித்திணைக்களத்திலிருந்து பேசுவதாக அடையாளப்படுத்தியிருக்கிறார். ஈஷா ஷர்வானி வரி மோசடியில் சம்பந்தப்பட்டிருப்பதாக கூறி வரித்திணைக்களத்துக்கு செலுத்தவேண்டிய ஐயாயிரத்து 700 டொலர் பணத்தை செலுத்தும்படியும் குறிப்பிட்ட நபர் கூறியுள்ளார்.

உடனடியாக அந்தப்பணத்தை குறிப்பிட்ட வங்கிக்கணக்கிற்கு ஈஷா ஷர்வானி பரிமாற்றம் செய்த பின்னர், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இன்னொரு அழைப்பில், அந்தப்பணம் தீவிரவாதிகளின் வங்கிக்கணக்கிற்கு சென்று சேர்ந்துள்ளதாக இன்னொரு அநாமதேய அழைப்பு மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் சந்தேகங்கொண்ட ஈஷா ஷர்வானி உடனடியாக பேர்த் பொலீஸாருக்கு குறிப்பிட்ட சம்பவத்தை முறையிட்டுள்ளார். முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலீஸார், டில்லிவரை பின்தொடர்ந்து சென்றதில் அங்கு தொலைபேசி அழைப்பு நிலையம் ஒன்றை சட்டவிரோதமாக நடத்தி வந்த பணம் பறிக்கும் கும்பலின் நடவடிக்கை குறித்து தெரியவந்துள்ளது.

டில்லி பொலீஸாரிடம் இது குறித்து அறிவித்தவுடன், குறிப்பிட்ட தொலைபேசி அழைப்பு நிலையத்தில் சென்று சட்ட விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த மூன்று ஆசாமிகளை பொலீஸார் மடக்கியுள்ளனர். இவர்களால் மோசடி செய்யப்பட்ட பணத்தையும் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now