இந்தியாவின் சண்டிகரில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதால் கர்ப்பமான, 10 வயது சிறுமியின் கருவைக் கலைக்க நீதிமன்றம் அனுமதி வழங்க மறுத்திருந்தநிலையில், அச்சிறுமிக்கு குழந்தை பிறந்துள்ளது.
உறவினர் ஒருவரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட 10 வயது சிறுமி கருவுற்றிருந்தமை, 30 வாரங்கள் கழித்தே கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.
இந்தப்பின்னணியில் சிறுமியின் கருவைக் கலைக்க அனுமதி கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
ஆனால் 30 வார வளர்ச்சி பெற்று இருந்த அந்த கருவைக் கலைப்பதால் தாய், சேய் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் தெரித்ததையடுத்து இதற்கான அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் கருவுற்றிருந்த அந்த சிறுமிக்கு சண்டிகர் அரசு மருத்துவமனையில் நேற்று சிசேரியன் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது.
இச்சிறுமிக்கு தான் கருவுற்றிருந்ததோ, குழந்தை பெற்றதோ தெரியாது என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அவரது வயிற்றில் ஒரு கட்டி இருப்பதாகவும், அதை அறுவை சிகிச்சை செய்யவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் சிறுமியிடம் பெற்றோர் அவரிடம் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம் பிறந்த குழந்தையை காப்பகத்தில் சேர்த்து தத்து கொடுக்கும் வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் சிறுமியின் பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 2015 ம் ஆண்டில் கிட்டத்தட்ட 11 ஆயிரம் சிறுவர் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
