SKIP TO MAIN CONTENT

இந்தியாவில் புதிய மதம் உருவானது: லிங்காயத் & வீர சைவர்கள்

இந்தியாவில் புதிய மதம் உருவானது: லிங்காயத் & வீர சைவர்கள்

Lingayath
Source: Raj

2 min read

Published

By Raymond Selvaraj


Skip to article content

இந்தியாவில் தமிழ்நாட்டின் அருகாமை மாநிலமான கர்நாடக மாநிலத்தில் பெரும்பகுதி மக்கள் சார்ந்திருக்கும் லிங்காயத் சமூகத்தை தனிமதமாக அங்கீகரித்து கர்நாடக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. மேலும், இதற்கான பரிந்துரையையும், மத்திய அரசுக்கு கர்நாடக அரசு அனுப்பியது. இதன்மூலம் லிங்காயத் மற்றும் வீர சைவர்கள் மத ரீதியில் சிறுபான்மை சமூகமாக அங்கீகரிக்கப்படுகின்றனர்.  

லிங்காயத் 12-ம் நூற்றாண்டில் வாழ்ந்த பசவரின் தனிசித்தாந்தங்களை பின்பற்றி தனியான வழிபாட்டு முறையை கடைபிடித்து வருகின்றனர். உலகம் அனைத்துக்கும் ஒரே மதம், சிவன் என்ற அடிப்படையில் சிவலிங்கத்தை மட்டுமே வழிபடுவர்களாகவும் வீர சைவர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், தங்களை தனிமதத்தினர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று நீண்ட ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக லிங்காயத் சமூகத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி இருக்கிறார்கள். இந்நிலையில், லிங்காயத் மக்களின் கோரிக்கை குறித்து பரிசீலிக்க கர்நாடக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி நாகமோகன்தாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு் ஆய்வு செய்யப்பட்டது. அந்த குழு லிங்காயத் சமூகத்தை தனிமதமாக அங்கீகரிக்கலாம் என்று பரிந்துரை செய்தனர்.

இந்த பரிந்துரைகள் குறித்து கர்நாடக அமைச்சரவையில் இன்று ஒப்பதல் அளிக்கப்பட்டு, லிங்காயத்துக்களை தனி மதத்தினராக அங்கீகரிக்கப்பட்டது. தங்களை வீர சைவர்கள் மற்றும் லிங்காயத் சமூகத்தினரை தனி மதமாக கர்நாடகா அரசு அங்கீகரித்துள்ளது.இதற்கான அறிக்கையை மத்திய அரசுக்கு அனுப்பிவைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலத்தில் விரைவில் தேர்தல் வரும் நிலையில், அங்குள்ள பெரும்பகுதி மக்கள் சார்ந்திருக்கும் லிங்காயத் சமூகத்தை தனிமதமாக அங்கீகரித்து கர்நாடக அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது பரபரப்பான செய்தியாகியுள்ளது.

எல்லோரும் இந்துக்கள் என்று ஒரு அடையாளத்தை இந்தியா முழுவதும் கொண்டுவர பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக விமர்சனம் எழுந்துவரும் நிலையில், இந்து சமயத்தின் ஒரு அங்கமாக இருந்துவந்ததாக கூறப்பட்டுவந்த லிங்காயத் மற்றும் வீர சைவர்கள் சமூகத்தை தனிமதமாக அங்கீகரித்து காங்கிரஸ் தலைமையிலான கர்நாடக அரசு ஒப்புதல் அளித்தது அரசியலாக பார்க்கப்படுகிறது.  


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now