ஐ.நா சபையின் யுனெஸ்கோ அமைப்பானது உலகப் பாரம்பரியமிக்க நகரமாக இந்தியாவின் அகமதாபாத்தை அறிவித்துள்ளது.
இதன் மூலம் உலகப் பாரம்பரியமிக்க புராதன நகரங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள முதல் இந்திய நகரமாக அகமதாபாத் காணப்படுகின்றது.
புராதன நகரம் பட்டியலில் இடம் பெறுவதற்கான போட்டியில் அகமதாபாத், டெல்லி, மும்பை ஆகிய நகரங்கள் பங்கேற்ற நிலையில்; அந்தப் பெருமையை அகமதாபாத் தட்டிச் சென்றது.
குஜராத்தின் அகமதாபாத் நகரம் கடந்த 600 ஆண்டுகளுக்கு முன்பு அகமது ஷா என்பவரால் உருவாக்கப்பட்டதாக நம்பப்படுகிறது. இங்குள்ள 26 வகையான பழமைமிகு கலைநயமிக்க கட்டிடங்கள், நூற்றுக்கணக்கான கலையம்சம் மிக்க குடியிருப்புகள் உள்ளிட்டவை தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

சுதந்திரப் போராட்டத்தின் போது அகமதாபாத் நகரில் மகாத்மா காந்தி 1915-ம் ஆண்டு முதல் 1930-ம் ஆண்டு வரை வாழ்ந்துள்ளார். அவருடன் தொடர்புடைய பல இடங்களும் ஏராளமாக உள்ளன.
யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரியமிக்க நகரங்களின் பட்டியலில் பிரான்ஸின் பாரிஸ், ஆஸ்திரியாவின் வியன்னா, எகிப்தின் கெய்ரோ, பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ், இத்தாலியின் ரோம், ஸ்காட்லாந்தின் எடின்பரோ ஆகிய நகரங்களின் வரிசையில் அகமதாபாத்தும் இடம் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
