பிரிஸ்பேர்னில் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு காணாமல்போன 22 மாத குழந்தை கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் இக்குழந்தையின் பெற்றோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தெற்கு பிரிஸ்பேர்னிலுள்ள Woodridge பகுதியைச் சேர்ந்த Baden Bond என்ற 22 மாதக் குழந்தை, 2007 மார்ச் மாதம் காணாமல்போயிருந்தது.

ஆனால் Baden Bond-இன் பெற்றோர் தமது குழந்தை காணாமல்போனதை கடந்த 2016 வரை காவல்துறைக்கு அறிவிக்கவில்லை என்பதுடன், Baden Bond உறவினர்களுடன் வாழ்ந்துவருவதாக தெரிவித்திருந்தனர்.
எனினும் தற்போது 12 வயது ஆகியிருக்க வேண்டிய Baden Bond, பாடசாலைக்கோ அல்லது மருத்துவமனைக்கோ சென்றதற்கான எந்த ஆதாரங்களும் இல்லாதநிலையில், இக்குழந்தை எங்கே என்று மும்முரமாக தேட ஆரம்பித்த காவல்துறையினர், இறுதியில் Baden Bond-இன் பெற்றோரை கொலைக் குற்றச்சாட்டின்பேரில் கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில் காணாமல்போனதாக நம்பப்பட்ட Baden Bond, 2007 மார்ச் 17 - 26க்கு இடையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும், இது தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் காவல்துறையினர் கோரியுள்ளனர்.
இதேவேளை கொலைக்குற்றச்சாட்டின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள Dina Colleen Bond(43), Shane Arthur Simpson(49) ஆகியோர் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 10ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதுடன், இவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
