ஆஸ்திரேலிய அரசு விதித்திருக்கும் பயணக்கட்டுப்பாட்டினால் நாடு திரும்பமுடியால் இந்தியாவில் சிக்கியிருக்கும் ஆயிரக்கணக்கான ஆஸ்திரேலிய குடிமக்கள் மற்றும் நிரந்தர வதிவிட உரிமை பெற்றவர்களில் 59 வயதுள்ள ஆண் புதுடில்லியில் கோவிட் தாக்கத்துக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளார். புதுடில்லியில் ஹோட்டல் நடத்திவருகின்ற இவர் கோவிட் தொற்றுக்குள்ளாகி பலியான செய்தியை, ஆஸ்திரேலியாவிலுள்ள அவரது மகள் உறுதிசெய்துள்ளார்.
சுமார் பத்துவருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் நிரந்தர வதிவிட விசா பெற்றுக்கொண்ட இவர், ஆஸ்திரேலியாவிலிருந்து புதுடில்லிக்கு பணிநிமிர்த்தம் அடிக்கடி சென்றுவந்தவராவார். ஆஸ்திரேலிய குடியுரிமையை பெற்றுக்கொள்வதற்கு தேவையானளவு காலப்பகுதியை அவர் ஆஸ்திரேலியாவில் நிறைவுசெய்யாத காரணத்தினால், அவர் ஆஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கமுடியவில்லை. ஆனால் அவரது மனைவி ஆஸ்திரேலிய குடியுரிமை பெற்ற நிலையில் இந்தியாவில் தொடர்ந்து சிக்கிக்கொண்டுள்ளார்.
தனது தந்தையின் மரணம் தொடர்பில், ஆஸ்திரேலிய அரசு மீது மிகுந்த விமர்சனத்தை விசனத்தை சிட்னியில் வாழும் அவரது மகள் Sonali Ralhan அவர்கள் Facebook வழி வெளியிட்டுள்ளார். தனது தந்தை கடந்த வருடம் முதல் ஆஸ்திரேலியா வருவதற்கு முயன்றதாகவும் முழுமையாக பதிவுசெய்யப்பட்ட விமானங்களில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்றும் ஆஸ்திரேலிய அரசு அறிவித்த பயணத்தடை குறித்து அவர் பதற்றத்துக்கும் அச்சத்துக்கும் உள்ளாகியிருந்ததாகவும் கூறியுள்ளார்.
இவரின் மரணத்தை ஆஸ்திரேலிய வெளிவிவகாரத்துறை அமைச்சர் Marise Payne உறுதிசெய்தார். ஆஸ்திரேலியர்கள் அனைவரையும் இந்தியாவிலிருந்து இங்கு கொண்டுவந்து சேர்க்கும் அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டிருப்பதாக Nine Radio விடம் பேசிய அமைச்சர் Marise Payne கூறினார். புதுடெல்லி, சென்னை, மும்பை, கல்கொத்தா ஆகிய நகரங்களில் அமைந்துள்ள ஆஸ்திரேலிய தூதரக மற்றும் துணைத் தூதரகங்கள் வழி அரசு இம்முயற்சிகளை துரிதப்படுத்தியிருப்பதாக அவர் கூறினார்.
ஆனால் நாட்டில் சிறப்பான விடுதி தனிமைப்படுத்தலுக்கு அரசு ஏற்பாடு செய்யாமால் வெளிநாடுகளில் சிக்கிகொண்டிருக்கும் ஆஸ்திரேலியர்களை இங்கு அழைத்துவரும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக வெறுமனே செய்தியாளர் கூட்டத்தில் பிரதமர் Scott Morrison கூறுவதாக வெளிவிவகாரம் தொடர்பான எதிர்கட்சியான லேபர் கட்சியின் அறிவிப்பாளர் Penny Wong கூறினார்.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.