அமெரிக்க சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஆஸ்திரேலிய பூர்வீக குடி பின்னணிகொண்ட Russell Moore ஆஸ்திரேலிய சிறைக்கு மாற்றப்படுவதற்கான நீண்ட போராட்டம் பலனளிக்காமல் நேற்றுமுன்தினம் ஜூன் இரண்டாம் திகதி சிறையில் காலமானார்.
Highlights
- பாரதூரமான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் அமெரிக்காவில் ஆயுள்தண்டனைபெற்ற ஆஸ்திரேலிய பூர்வீக குடி பின்னணி கொண்ட Russell Moore காலமானார்.
- ஆஸ்திரேலிய சிறைக்கு மாற்றுமாறுகோரி 30 ஆண்டுகளாக Russell Moore போராடி வந்தார்.
- Russell Moore-ஐ ஆஸ்திரேலியா அழைத்துவருவதற்கு ஆஸ்திரேலிய - விக்டோரிய அரசுகள் ஆதரவளித்தன.
மெல்பன் Fitzroy பகுதியில் பிறந்த Russell Moore குழந்தைப்பருவத்திலேயே தத்துக்கொடுக்கப்பட்டு, பின் தனது ஏழாவது வயதில் தத்தெடுத்த பெற்றோர் அமெரிக்கா சென்றபோது அவர்களோடு அழைத்துச்செல்லப்பட்டார்.
அங்கு Orlando பகுதியில் 57 வயது பெண்ணொருவரை கொள்ளையடித்து பாலியல் தாக்குதலுக்கு உட்படுத்தி படுகொலை செய்தார் என்ற குற்றத்தில் 1991இல் பரோல் வழங்கமுடியாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைப்படுத்தப்பட்டார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த பூர்வீக குடிமக்களுக்கான சட்ட ஆலோசகராக பணியாற்றிய Chris Loorham இந்த சம்பவத்தை அறிந்து Russell Moore-ஐ சந்திப்பதற்காக அமெரிக்காவுக்கு சென்றார்.
அவரது முயற்சியினால் Russell Moore-இன் உண்மையான தாயார் ஆஸ்திரேலியாவில் கண்டறியப்பட்டு தனது மகனின் புதிய அடையாளத்தையோ, அவனது வசிப்பிடம் பற்றியோ எதுவும் அறிந்திராத அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச்செல்லப்பட்டார். Russell Moore-ஐ சிறையில் சந்தித்தார்.
இவர்கள் இருவரும் சிறைச்சாலையிலுள்ள விருந்தினர் அறையில் சந்தித்த அந்த நாளை தன்னால் மறக்கவே முடியாது என Chris Loorham குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து Russell Moore-ஐ ஆஸ்திரேலிய சிறைக்கு மாற்றவேண்டும் என்று அவரது தாயார் தொடர்ந்து போராடினார்.
இந்தக்கோரிக்கைக்கு ஆஸ்திரேலிய - விக்டோரிய அரசுகள் ஆதரவளித்தபோதும் 2007 இல் ஒரு தடவையும் 2012 இல் இன்னொரு தடவையும் அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
2017 இல் Russell Moore-இன் தாயார் இயற்கை எய்தினார். நேற்றுமுன்தினம் Russell Moore அமெரிக்காவின் புளோரிடாவில் அமைந்துள்ள Apalachee Correctional Institution-இல் இயற்கை எய்தினார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இறக்கும்போது அவரது வயது 58.
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாக கேட்கலாம்.
உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள்.
டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
