தொழிலாளர் உரிமைகள் தொடர்பான பாரிய திருத்தங்களுடன் அடுத்த வாரம் மொறிஸன் அரசு அறிமுகப்படுத்தவுள்ள சட்டமுன்வடிவானது, தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக அமைந்தாலோ அல்லது ஊதியங்களைப் பாதித்தாலோ தாங்கள் கடுமையாக எதிர்க்கப்போவதாக தொழிற்சங்கங்களின் சம்மேளனம்-Australian Council of Trade Unions அறிவித்துள்ளது.
பணியிட பாதுகாப்பு, தொழிலாளர் உரிமைகள் என்பவை உட்பட தொழில் வழங்குனர் - தொழிலாளர் உறவுகள் சார்ந்து பல்வேறு மாற்றங்களுடன் கூடிய புதிய சட்டத்திருத்தத்தினை மொறிஸன் அரசு அடுத்த வாரம் வெளியிடவுள்ளது.
அநேகமாக, அந்த திருத்தங்களை அடுத்த வருடம் நடைமுறைப்படுத்தவும் முடிவெடுத்துள்ளது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தொழிற்சங்கங்களின் சம்மேளன பொதுச்செயலர் Sally McManus - கோவிட் காலத்தில் நாடெங்கிலுமுள்ள வேலைத்தளங்களில் அயராது உழைத்த தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பை நல்கியுள்ளார்கள். அவர்களுக்கு கொடுக்கவேண்டிய மதிப்பையும் உதவியையும் அரசாங்கம் வழங்கத்தவறிவிட்டது. இந்நிலையில், தற்போது இருக்கும் உரிமைகளையும் பிடுங்கிக்கொள்ளும்வகையில், புதிய சட்டத்திருத்தங்களை கொண்டுவருவதற்கு அரசு முனைவதுபோல தெரிகிறது. அவ்வாறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டால், தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் இறங்கும்- என்று தெரிவித்துள்ளார்
