புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை தரவேற்றும் பிரபல சமூகவலைத்தளமான Instagram அண்மையில் கொண்டுவந்திருக்கும் புதிய மாற்றம் தொடர்பில் பலரும் வரவேற்பு தெரிவித்திருக்கிறார்கள்.
Instagram செயலியில் ஒவ்வொருவரும் கொண்டுள்ள தனிக்கணக்குகளில் தரவேற்றும் படங்களுக்கு எத்தனை விருப்பக்குறிகள் இடப்படுகின்றன என்ற விவரத்தை முதற்பக்கத்திலேயே கண்டுகொள்ளும் தெரிவை Instagram செயலி அமைப்பாளர்கள் களைந்திருக்கிறார்கள்.
இந்தப்புதிய மாற்றம் ஆஸ்திரேலியா, பிரேஸில், கனடா, அயர்லாந்து, இத்தாலி, ஜப்பான், நியூஸிலாந்து ஆகிய நாடுகளிலுள்ள பயனாளர்கள் மத்தியில் பரீட்சார்த்தமுறையில் சோதனை செய்து பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Instagram செயலியை பயன்படுத்துபவர்கள் இந்த புதிய மாற்றம் குறித்து கருத்து தெரிவிக்கும்போது - இது உண்மையிலேயே நல்ல மாற்றம் என்றும் விருப்பக்குறிகளின் அடிப்படையில் படங்களின் மீது விருப்பம் கொள்ளாமல் உண்மையிலேயே படங்களின் சிறப்பின் அடிப்படையில் அவற்றின் மீதான ஒவ்வொருவரதும் அழகுணர்வு சார்ந்து விருப்பக்குறியிட முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் விருப்பக்குறிகளின் எண்ணிக்கை ஒருவரின் உளவியலில் ஏற்படுத்தும் தாக்கத்தையும் இப்புதிய மாற்றம் குறைத்திருப்பதாக மற்றுமொருசாரார் கூறியுள்ளனர்.
இருப்பினும் Instagram செயலியை வர்த்தக நோக்கத்துக்காக பயன்படுத்துபவர்களும் பிரபலங்கள் பலரும் இம்மாற்றத்திற்கு எதிராக குரல்கொடுத்துள்ளனர்.
2010 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட Instagram செயலி மிகக்குறைந்த காலப்பகுதியிலேயே பல்லாயிரக்கணக்கானவர்களின் விருப்பத்துக்குரிய சமூகவலைத்தளமாக மாற்றம்பெற்று இன்று நாள்தோறும் 50 கோடி மக்கள் பயன்படுத்தும் தளமாக மாறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
