காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்கள் தங்கள் வாழ்விடங்களை மீளக்கட்டியெழுப்பவும் இழந்தவற்றை மீளப்பெற்றுக்கொள்ளவும் அரசாங்கம் பல்வேறு வகைகளில் உதவி செய்வதற்கு உறுதிபூண்டிருப்பதாக இடர்முகாமைத்துவ அமைச்சர் David Littleproud தெரிவித்துள்ளார்.
அந்த நிவாரண உதவிகளில் ஒன்றாக வர்த்தகர்கள் மற்றும் சிறுவணிகர்களுக்கான 500 ஆயிரம் டொலர் வட்டியில்லா கடனும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 500 ஆயிரம் டொலர் கடனுக்கு முதலிரண்டு வருடங்களுக்கு எந்த பணமும் மீளச்செலுத்த தேவையில்லை என்றும் இரண்டு வருடங்களுக்கு பின்னர் வட்டியின்றி மாதாந்த கொடுப்பனவை மட்டும் செலுத்தினால் போதும் என்றும் அமைச்சர் David Littleproud கூறியுள்ளார்.
இதேவேளை பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் வாழ்விடங்களை மீளக்கட்டியெழுப்புவது மற்றும் அதற்கான உதவித்தொகைகள் குறித்த அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது ஆயிரம் டொலர் பணம் வழங்கப்படுகிறது. அதைவிட, 13 வாரங்களுக்கான உதவித்தொகையும் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
