ஆஸ்திரேலிய அரசின் அதிகாரபூர்வ வட்டி வீதம் 0.25 என்று Reserve வங்கி இன்று அறிவித்தது.
தற்போது 0.50 சதம் என்று இருந்த வட்டி வீதம் 0.25 சதத்தால் குறைக்கப்பட்டு இனி வட்டி வீதம் 0.25-ஆக இருக்கும் என்று அரசின் Reserve வங்கி அறிவித்தது.
வரலாறு காணாத இவ்வட்டிவீத குறைப்பினை வழமைக்கு மாறாக திடீர் அறிவிப்பாக Reserve வங்கி வெளியிட்டுள்ளது.
உலக பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டிருக்கும் தேக்கம், நாட்டில் உயர்ந்து வரும் வேலையில்லா திண்டாட்டம், நிறுவனங்களில் ஊழியர்களுக்கான சம்பளம் அதிகரிக்காமல் இருக்கும் நிலைமை என்று பல காரணங்களைக் கூறினாலும், கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுத்தியிருக்கும் தாக்கம் தான் இந்த வட்டி குறைப்பை அவசியமாக்கியதாக Reserve வங்கி தெரிவித்தது.
Reserve வங்கி அறிவித்திருக்கும் புதிய வட்டி வீதத்தை நாட்டின் முன்னணி வங்கிகள் வீட்டுக் கடன் வைத்திருக்கும் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த வட்டி குறைப்பை முழுமையாக வழங்குமா என்று தெரியவில்லை.
கடந்த ஆண்டு Reserve வங்கி வட்டி வீதத்தைக் குறைத்திருந்தாலும், வாடிக்கையாளர்களின் வட்டி வீதத்தைப் பெரும்பான்மையான வங்கிகள் குறைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
