விக்டோரியா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வேலைகளை இழந்துள்ள வெளிநாட்டு மாணவர்களுக்கு உதவவென சுமார் 45 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்திருந்தநிலையில் இதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
The International Student Emergency Relief Fund என்ற இத்திட்டத்தின்கீழ் தகுதிபெறும் வெளிநாட்டு மாணவர் ஒருவர் 1100 டொலர்கள் வரையான -ஒருதடவை மாத்திரம் வழங்கப்படும் கொடுப்பனவை பெறமுடியும்.
விக்டோரியா மாநிலத்தில் கல்விபயிலும் வெளிநாட்டு மாணவர்கள் பல்வேறு வழிகளிலும் மாநிலத்தின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு வழங்கியுள்ள பின்னணியில் அவர்களுக்கு இந்நிதியுதவியை தற்போதைய காலகட்டத்தில் வழங்குவது அவசியமாவதாக மாநில அரசு தெரிவித்திருந்தது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தமது வேலைகளை இழந்த மற்றும் வேலை நேரம் குறைக்கப்பட்டதால் தமது வருமானத்தில் கணிசமானளவு இழப்பை சந்தித்துள்ள வெளிநாட்டு மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடையமுடியும்.
ஆஸ்திரேலிய அரசால் அறிவிக்கப்பட்ட நிதியுதவிகளைப் பெறுவதற்கு வெளிநாட்டு மாணவர்கள் தகுதிபெறாத பின்னணியில், தமது மாநிலத்திலுள்ள மாணவர்களுக்கு உதவ விக்டோரிய மாநில அரசு முன்வந்திருந்தது.
விக்டோரிய மாநில அரசின் நிதியுதவியைப் பெறுவதற்கான விண்ணப்பங்களைத் தாக்கல் செய்யவும் மேலதிக விபரங்களைப் பெற்றுக்கொள்ளவும் கீழ்க்காணும் இணைப்பிற்குச் செல்லவும்.
உங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தால் உங்களது மருத்துவரையோ அல்லது 1800 020 080 என்ற இலக்கத்தையோ அழையுங்கள்.
கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டால் மிகவும் இலேசான அறிகுறிகள் முதல் நிமோனியா வரை செல்லக்கூடும் என அரச இணையத்தளம் கூறுகின்றது. காய்ச்சல், தொண்டை நோவு, இருமல், உடற்சோர்வு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் முக்கியமானவை.
உங்களுக்கு கடுமையான உடல்நலக்குறைவு ஏற்பட்டால் அல்லது சுவாசிப்பதற்கு சிரமம் ஏற்பட்டால் 000 என்ற இலக்கத்தை அழையுங்கள்.
ஒவ்வொருவருக்கிடையிலும் 1.5 மீட்டர் சமூக இடைவெளியைப் பேணுங்கள்.
அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள COVIDSafe செயலியை உங்கள் கைபேசியில் தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
கொரோனா வைரஸ் (COVID-19) குறித்த முக்கிய தகவல்கள் sbs.com.au/coronavirus என்ற எமது இணையத்தில் 63 மொழிகளில் கிடைக்கின்றன.
Share
