நாட்டில் கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா வருபவர்கள் 14 நாட்களுக்கு ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களில் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்குச் சென்ற ஆஸ்திரேலியர்கள் நாடுதிரும்பிய பின்னர் தமது வீடுகளிலோ அல்லது தங்குமிடங்களிலோ சுய-தனிமைக்கு உட்பட வேண்டுமென்ற சட்டமே இதுவரை காணப்பட்ட நிலையில் இந்நடைமுறை மாற்றப்படுகிறது.
இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து வந்தோர் தமது வீடுகளில் தனிமைப்படுத்தப்படும்போது அந்த வீட்டிலுள்ள ஏனையோர் நோய்த்தொற்றுக்கு உள்ளாகக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இப்புதியநடைமுறை கொண்டுவரப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
இதன்படி நாளை சனிக்கிழமை நள்ளிரவுக்குப் பின்னர் வெளிநாட்டிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பும் ஒருவர் அவர் எந்த மாநிலத்தில் வந்திறங்குகிறாரோ அந்த மாநிலத்திலேயே 14 நாட்களுக்கு ஹோட்டல்கள் மற்றும் தங்குமிடங்களில் தனிமைப்படுத்தப்படவுள்ளார்.
விமான சேவைகள் குறைக்கப்பட்டு பயணத்தடைகள் நடைமுறையில் உள்ளபோதிலும் தொடர்ச்சியாக பல ஆஸ்திரேலியர்கள் நாடுதிரும்பியவண்ணம் உள்ளனர். நேற்றுமட்டும் சுமார் 7000 பேருக்கு மேற்பட்டோர் வெளிநாடுகளிலிருந்து ஆஸ்திரேலியா திரும்பியிருந்தனர்.
ஆஸ்திரேலிய மாநிலங்கள் மற்றும் பிராந்தியங்களில் மேற்கொள்ளப்படும் இந்நடவடிக்கை சரியாக நடக்கிறதா என்பதைக் கண்காணிக்கும் பணியில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவர் எனவும் பிரதமர் ஸ்கொட் மொறிசன் அறிவித்தார்.
முழுநாட்டையும் முடக்கவேண்டிய தேவை தற்போது இல்லை எனவும் வீடுகளில் தங்கியிருக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை ஆஸ்திரேலியர்கள் சிறந்தமுறையில் கடைப்பிடித்துவருவதாகவும் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Share
