அகதிகள் வருகை பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டதையடுத்து ஆஸ்திரேலியாவின் இருபெரும் உயர் பாதுகாப்பு முகாம்கள் புதுவருடத்தில் மூடப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மெல்பேர்ன் Maribyrnong குடிவரவு தடுப்பு முகாமிலுள்ள கடைசி முகாம்வாசி வெளியேறுவதையடுத்து குறித்த முகாம் இந்த வாரம் மூடப்படும் அதேநேரம் - சிட்னி விலவூட் தடுப்பு முகாமின் பகுதியாக உள்ள Blaxland centre அங்குள்ள சிறு எண்ணிக்கையிலான முகாம்வாசிகள் ஏனைய முகாம்களுக்கு மாற்றப்படுவதை அடுத்து எதிர்வரும் மே மாதம் மூடப்படுகிறது.
2013 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு பெரும் எண்ணிக்கையில் வந்து சேர்ந்து படகு மூலமான அகதிகளினால் அப்போது ஆட்சியிலிருந்து லேபர் அரசாங்கம் 17 புதிய முகாம்களை திறந்திருந்தது.
லேபர் ஆட்சியில் மொத்தம் 26 அகதி முகாம்கள் இயங்கிவந்தன. ஆனால், லிபரல் ஆட்சிக்கு வந்த பின்னர், படிப்படியாக கட்டுபடுத்தப்பட்ட அகதிகளின் வருகைக்கு சமாந்தரமாக அகதி முகாம்களும் மூடப்பட்டன.
தற்போது ஆஸ்திரேலியாவில் எட்டு அகதி முகாம்கள் மாத்திரமே சுமார் 1250 அகதிகளுடன் இயங்கிவருகின்றன.
ஆஸ்திரேலியாவுக்கு வெளியே நவுறு - மனுஸ் தீவுகளில் சுமார் ஆயிரம் அகதிகள் உள்ளனர்.
சட்டவிரோதமாக நாட்டுக்கு வந்தவர்கள், அகதிகளாக சமூகத்தில் இணைக்கப்பட்ட பின்னர் தவறான நடத்தைகளின் பிரகாரம் கைது செய்யப்பட்டு மீண்டும் தடுப்புக்கு கொண்டுவரப்பட்டவர்கள், விஸா கால எல்லை முடிவடைந்த பின்னரும் நாட்டில் தங்கியிருந்தவர்கள், தாங்கள் இந்த நாட்டில் தங்கியிருப்பதற்கான காரணத்தை சட்ட ரீதியாக நிரூபிப்பதற்காக வழக்குகள் மற்றும் மேன்முறையீடுகள் தாக்கல் செய்துள்ளவர்கள் என்று பல வகையானவர்கள் ஆஸ்திரேலியாவிலுள்ள அகதிகள் முகாம்களில் இப்போது தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள்.
மூடப்பட்டுவரும் தடுப்புமுகாம்கள் குறித்து குடிவரவு அமைச்சர் David Coleman கருத்துக்கூறும்போது -இது தமது அரசாங்கத்தின் சாதனைகளில் ஒன்று என்றும் பெருமைப்படவேண்டிய ஒன்று என்றும் தெரிவித்துள்ளார்.
Share
