சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள உலகின் மிகப்பெறுமதியான கைத்தொலைபேசி எனப்படுகின்ற Galaxy Fold மடிக்கும் கைத்தொலைபேசி சந்தைக்கு வருவதற்கு முன்னரே உடையத்தொடங்கிவிட்டதாக இத்தொலைபேசி வெளியீட்டின்போது அவற்றை பெற்றுக்கொண்ட ஊடகவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
விற்பனைக்கு வெளியிடுவதற்கு முன்னர், தமது புதிய ரக கைத்தொலைபேசிகளை அறிமுகம் செய்யும் நிகழ்வில் Galaxy Fold தொலைபேசிகளை ஊடகவியலாளர்களின் பாவனைக்கு கொடுத்த சாம்சங் நிறுவனம் கைத்தொலைபேசி தொடர்பான மதிப்பீட்டினை பொதுமக்களிடம் கொண்டுசெல்வதற்கு எதிர்பார்த்திருந்தது.
இந்நிலையில், Galaxy Fold தொலைபேசியை பயன்படுத்திய சில ஊடகவியலாளர்கள், வாங்கி இரண்டு நாட்களிலேயே Galaxy Fold திரை கறுப்பாகி உடையத்தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால், நாளொன்று 100 தடவைகள்படி ஐந்துவருட பாவனைக்காலத்தில் இரண்டு லட்சம் தடவைகளுக்கும் மேல் மடிக்கக்கூடியளவு தொழில்நுட்பத்தரத்தோடுதான் தாங்கள் Galaxy Fold தொலைபேசியை உருவாக்கியுள்ளதாக சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் 26 ஆம் திகதி அமெரிக்காவில் முதல் தடவையாக சந்தைக்கு வரவுள்ள Galaxy Fold தொலைபேசியின் விலை ஆஸ்திரேலிய பெறுமதியில் 2770 டொலர்களாகும்.
