மெல்பேர்னில் இடம்பெற்ற இஸ்ரேலிய மாணவி Aiia Maasarwe படுகொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு கொலை மற்றும் பாலியல் வன்புணர்வு உள்ளிட்ட பிரிவுகளில் பொலீஸாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ள Codey Herrmann என்ற 20 வயது இளைஞர் நாளை திங்கட் கிழமை மீண்டும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
குறிப்பிட்ட மாணவியின் படுகொலை தொடர்பாக பொலீஸார் மேற்கொண்ட விரிவான விசாரணைகளின் பின்னர் கைது செய்யயப்பட்ட குறிப்பிட்ட இளைஞர் மெல்பேர்ன் மஜிஸ்ரேட்டில் முன்னிலைப்படுத்தப்பட்டு தற்போது தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். தன்னைத்தானே சொல்லிசை கலைஞர் என்றும் பாடலாசிரியர் என்றும் தெரிவித்து மூன்றுக்கும் மேற்பட்ட சமூக வலைத்தள கணக்குகளை பேணிவந்த இந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்பது குறித்த மருத்துவ பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இவரது அண்மைக்கால சமூக வலைத்தள பதிவுகள் தற்கொலை மற்றும் மன அழுத்தங்கள் தொடர்பாகவும் காணப்பட்டிருக்கின்றன என்றும் படுகொலை சம்பவம் இடம்பெற்ற பின்னரும்கூட மதுப்போத்தலுடன் எடுக்கப்பட்ட படமொன்று இவரது சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்டிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் கொலையாளியின் ரீ சேர்ட், தொப்பி ஆகியவற்றின் மரபணு தடயங்களை ஒப்பிட்டு பார்த்ததன் மூலமும் குறிப்பிட்ட இளைஞர் கொலை இடம்பெறுவதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்னர் தனது சமூக வலைத்தள பக்கத்திலேயே பகிர்ந்துகொண்ட ஒரு பதிவின் அடிப்படையிலும்தான் இந்தக்கைது இடம்பெற்றிருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இளைஞர் பிணை விண்ணப்பம் எதனையும் தாக்கல் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொலை இடம்பெற்ற சமயம் தன்னுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்த Aiia Maasarwe, திடீரென்று வீறிட்டழுத சத்தத்தை கேட்டதாகவும் தொலைபேசி கீழே விழுந்த பின்னர் அது துண்டிக்கப்பட்டதை உணர்ந்துகொண்டதாகவும் சீனாவிலிருக்கும் அவரது சகோதரி கூறியுள்ளார்.
தனது மகளின் மரணத்தை அடுத்து மெல்பேர்ன் வந்துள்ள Aiia Maasarweவின் தந்தையார் மகளின் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். அவரை பிரதமர் Scott Morrison சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
