இஸ்ரேலியர்கள் பாலஸ்தீந முஸ்லீம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வாழும் இந்த குறிப்பிட்ட நிலப்பரப்பில் உத்தியோகபூர்வமாக இரண்டு நாடுகள், சுதந்திர தனித்தனி நாடுகள் அமைக்கப்படுவதை அங்கீகரிப்பதைத்தான் ‘இரு நாடுகள் தீர்வு’ என்று சொல்கிறார்கள். தற்போதைய நிலையில் இஸ்ரேல் தனிநாடாக இருந்தாலும் பலஸ்தீனியர்களும் சில முஸ்லீம் நாடுகளும் -Syria, Iran, Saudi Arabia, Malaysia, Indonesia போன்ற நாடுகள் இஸ்ரேலை அங்கீகரிக்கவில்லை.
பாலஸ்தீனியர்களைப் பொறுத்த அளவில் Gaza மற்றும் West Bank பகுதிகளில் அவர்கள் வசித்தாலும் அப்பகுதிகள் நேரடியாக இஸ்ரேலின் கண்காணிப்பின் கீழும் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கின்றன. அப்பகுதியில் உள்ளவர்கள் சுதந்திரமாக வாழமுடியவில்லை என்பதோடு West Bank பகுதி படிப்படியாக இஸ்ரேலால் ஆக்ரமிக்கப்பட்டு வருகிறது. ஆகவே இஸ்ரேலைப்போலவே சுதந்திரமான ஒரு நாட்டை பலஸ்தீனியர்களுக்கு உருவாக்கி அதன் எல்லைகளைத் தீர்மானித்து பலஸ்தீனியர்கள் யாருடைய கட்டுப்பாட்டிலோ தயவிலோ இல்லாமல் வாழ வழி வகுப்பது தான் இந்த இரு நாடுகள் என்ற தீர்வு.
அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், ஆஸ்திரேலியா, கனடா, எகிப்து போன்ற பலநாடுகள் நீண்ட காலமாக இந்த இருநாடுகள் என்றதீர்வை ஆதரித்துவந்தாலும் தற்போதைய இஸ்ரேலிய பிரதமர் Benjamin Netanyahu இதை எப்போதும் ஆதரித்ததில்லை.

1948 தொடக்கம், இருநாடுகள் என்ற தீர்வே சரியான தீர்வாக இருக்கும் என்று சர்வதேச ரீதியாகப் பேசப்பட்டு வந்தாலும் படிப்படியாக ஏற்பட்ட அரசியல் மற்றும் சர்வதேச நிலைப்பாடுகள் காரணமாக இன்றைய நிலையில் அந்தத் தீர்வு கைக்கு எட்டாத தூரம் போய்விட்டதாகவே பலரும் கருதுகிறார்கள். இன்னும் தெளிவாகச் சொல்வதாயின் அந்த தீர்வு ஏற்பட சாத்தியமே இல்லை என்பதுதான் இன்றைய நிலை.
ஆனால் இருநாடுகள் என்ற தீர்வு ஒன்றுதான் சரியான தீர்வாக இருக்கமுடியும் என்பதே இப்போதும் பொதுவான கருத்தாக இருக்கிறது.
இருநாடுகள் என்ற தீர்வு எந்தவித்த்தில் பிரச்சனைகளத் தீர்க்கும் என்று ஆர்ய்வோம். சுதந்திரமான பாலஸ்தீன நாடு ஒன்று அமைக்கப்படுவதன் மூலமாக பாலஸ்தீனியர்களுக்கு சுயநிர்ணய உரிமை, சுதந்திரம், தமது எல்லைகளுக்குள் இறையாண்மை என்பன கிடைக்கும்.
சுதந்திர பலஸ்தீனம் அமையும்போது, தங்கள் எல்லைகளுக்குள் தங்கள் நிர்வாகத்தை நடத்துவது, மற்ற நாடுகளுடன் உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது, தங்கள் அதிகாரங்களையும் தங்கள் எல்லைகளையும் பாது காத்துக்கொள்ளும் உரிமையும் அவர்களுக்கு கிடைக்கும். ஏனைய நாடுகளும் அந்த உரிமைகளை ஏற்றுக்கொள்ளும்.
அதே நேரத்தில் இஸ்ரேல் இறையாண்மையும் சுதந்திரமுமுள்ள தனி நாடு என்பதை பாலஸ்தீனியர்கள் ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகும்.

ஐக்கியநாடுகள் சபையிலுள்ள 139 நாடுகள் பலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அங்கீகரித்தாலும் Westbank மற்றும் Gaza பகுதியில் அமைந்துள்ள பாலஸ்தீன நிர்வாகமான Palestinian Authority மற்றும் Gaza பகுதியை நிர்வகித்துவரும் Hamas ஆகிய அமைப்புகள் தங்களது எல்லைகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அதிகாரமில்லாத அமைப்பாக இருக்கின்றன.
1947 இல் இதற்கான தீர்மானத்தை ஐக்கிய நாடுகள் சபை Resolution 181 என்ற பெயரில் நிறைவேற்றியபோதும் அந்தத் தீர்மானம் வரையறுத்த எல்லைகள் தொடர்பாக இணக்கம் காணப்படவில்லை. 1948 இல் இஸ்ரேல் சுதந்திரப் பிரகடனம் செய்ததைத் தொடர்ந்து இடம்பெற்ற அரபு இஸ்ரேல் யுத்தம் காரணமாக 7 லட்சத்திற்கு மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் அகதிகளாக்கப்பட்டு Gaza மற்றும் West Bank பகுதிகளுக்குத் துரத்தப்பட்டர்கள். இதனோடு ஐ.நாவின் ‘இருநாடுகள் என்ற தீர்வு’ வலுவிழந்ததோடு, 1967 இல் இடம்பெற்ற six day war என்ற போரில் இஸ்ரேல் West Bank, Gaza, கிழக்கு ஜெருசலேம், Golan Heights என்ற பகுதிகளைக் கைப்பற்றியதால் ஐ.நா முன்மொழிந்த எல்லைகளும் அர்த்தமற்றுப் போயின.

1967 போருக்கு முன்பு இருந்த எல்லைகளை ஒரு சாராரும் இந்த போர் நடந்து முடிந்த பின்னர் இஸ்ரேல் ஏற்படுத்திய பிந்தைய எல்லைகளை மறுசாராரும் பரிந்துரை செய்து வருகிறார்கள். 1967 இற்கு முன் West Bank பகுதி முழுமையாக பாலஸ்தீனியர்கள் வசம் இருந்தது. இப்போது அதன் பெரும்பகுதி இஸ்ரேலால் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிரவும் Jerusalem இருசாராருக்கும் மதரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் இது எவ்விதம் பிரிக்கப்படவேண்டும் என்பன போன்ற விடயங்களில் ஒருமித்த கருத்து இப்போதும் இல்லை. ஆகவே இருநாடுகள் என்ற தீர்வு எட்டாக்கனியாக வெகு உயரத்திற்குச் சென்றுவிட்டது.
1993 இல் இடம் பெற்ற Oslo Accord -ஒஸ்லோ ஒப்பந்தம் காரணமாக பலஸ்தீனிய எல்லைகள் வகுக்கப்படுவது உறுதியானபோதும் இதில் முன்னேற்றம் காணப்படாமல் போனது தனிக்கதை. அமெரிக்காவின் அப்போதைய அதிபர் Bill Clinton இன் சமரச முயற்சியின் பயனாக பலஸ்தினிய விடுதலை இயக்கத்தின் தலைவர் Yasser Arafat மற்றும் இஸ்ரேலிய அப்போதைய பிரதமர் Yitzhak Rabin ஆகியோருக்குடையே இஸ்ரேலிய இராணுவத்தை பாலஸ்தீனப் பிரதேசங்களிலிருந்து விலக்கிக்கொள்வது தொடர்பாகவும் பாலஸ்தீனிய எல்லைகளை பரஸ்பரம் இரு சாராரும் விட்டுக்கொடுத்து வகுத்துக்கொள்வது தொடர்பாகவும் இணக்கம் ஏற்பட்டது. இந்த வரலாற்று முக்கியத்துவம் மிக்க இணக்கப்பாட்டை எட்டியமைக்காக Arafat, Rabin மற்றும் இஸ்ரேலிய வெளிநாட்டமைச்சர் Shimon Peres ஆகியோருக்கு அந்த வருடம் சமாதானத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1995 இல் Oslo ஒப்பந்தம் கையெழுத்தாகிய ஆறாவது வாரம், இஸ்ரேலிய பிரதமர் Rabin சுட்டுக்கொல்லப்பட்டார். அவர் அதிகமாக விட்டுக்கொடுத்துவிட்டார் என்று கருதிய இஸ்ரேலிய தேசியவாதி ஒருவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் அந்த ஒப்பந்தம் கிடப்பில் போடப்பட்டது.
இஸ்ரேல் மீதான அமெரிக்காவின் அழுத்தம் குறைந்து அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை முழுமையாக எடுக்கத்தொடங்கியதாலும், பாலஸ்தீனிய அதிகாரசபையின் அதிகாரங்கள் முடக்கப்பட்டதாலும், Hamas இஸ்ரேலுக்கு எதிரான முழுமையான நிலைப்பாட்டை எடுத்ததாலும் தொடர்ந்துவரும் மோதல்கள் காரணமாகவும் தற்போது முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டுள்ளது.
இப்போது என்ன மாற்றுவழி அல்லது அமைதிக்கு சாத்தியமுண்டா என்று பலரும் ஆலோசிக்க துவங்கியுள்ளனர். ‘One state solution’ ‘ ஒரே நாடு’ என்ற தீர்வு ஒன்று பற்றி பேசப்படுகிறது. Westbank, Gaza பகுதியிலுள்ள அனைவருக்கும் இஸ்ரேலிய குடியுரிமை வழங்கி இரண்டு இனங்களும் இணைந்து வாழும் குடியாட்சி முறைமையே இதுவாகும். இதற்கு இரு தரப்பிலும் போதுமான ஆதரவில்லை.
இஸ்ரேல் Gaza மற்றும் Westbank போன்ற எல்லாப்பகுதிகளையும் ஆக்ரமித்து அனைத்து பகுதிகளையும் இஸ்ரேலிய கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும் என்று இஸ்ரேலிய அரசில் வலதுசாரி அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இது சர்வதேச மனித உரிமைகளை மீறும் செயலாகும் என்பதும் இஸ்ரேலுக்கு எதிரான நிலைப்பாட்டை பலநாடுகள் எடுக்கக்கூடும் என்பதாலும் இந்த அதிரடியான திட்டத்தை இஸ்ரேல் ஆதரிக்கவில்லை.
‘Status quo’ என்ற ‘தற்போதுள்ள நிலையைத்தொடர்வது’ என்பது மற்றொரு ஆலோசனையாகும். ஆனால் இதுவும் இனி சாத்தியமில்லை என்பதை சென்ற வருடம் October 7 ஆம் தேதி இஸ்ரேலுக்குள் ஊடுருவி Hamas நடத்தியதாக்குதல்களும் அதன் விளைவுகள் இன்று வரை தொடர்வதும் உணர்த்துகின்றன.
எனவே முன்பு வைக்கப்பட்ட யோசனைகளா அல்லது புதிய யோசனை எதுவும் வருமா என்று உலகம் காத்துள்ளது.

——————————————————————————————
SBS தமிழ் ஒலிபரப்பை திங்கள், புதன், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் மதியம் 12 மணிக்கு நேரலையாக Pop Desi எனும் டிஜிட்டல் அலையிலும், திங்கள், புதன், வெள்ளி மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு SBS Radio 2 வழியாகவும் கேட்கலாம். உங்களது பிரதேசத்துக்குரிய அலைவரிசை என்னவென்று தெரிந்துகொள்ள எமது tune in பக்கத்திற்குச் செல்லுங்கள். டிஜிட்டல் வானொலியில் செவிமடுக்க ‘SBS Radio’ எனத் தேடுங்கள்.
