ஈக்குவடோர் ஜனாதிபதி Lenín Moreno தனது விடுறையின்போது தங்கியிருந்த ஹோட்டலில் lobster-சிங்கி இறால் தட்டோடு எடுத்த படங்கள் உட்பட அவரது குடும்பத்தினருடன் எடுத்துக்கொண்ட பல தனிப்பட்ட புகைப்பட்டங்களை விக்கிலீக்ஸ் நிறுவனம் வெளியிட்டதுதான் ஜூலியன் அசான்ஜே லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு - வெளியே சொல்லப்படாத முக்கிய - காரணங்களில் ஒன்றாக அமைந்தது என பிரிட்டனின் "த சண்டே மெய்ல்" ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈக்குவடோரின் ஜனாதிபதியாக கடந்த 2017 இல் பதவியேற்ற Lenín Moreno 2018 இல் அமெரிக்காவின் உப ஜனாதியை சந்தித்து பேசி இரண்டு நாடுகளுக்கும் இடையிலிருந்த கசப்பான உறவுகளிலிருந்து விடுபட்டு இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஆரம்பித்த நல்லுறவின் பின்னணியிலேயே ஜூலியனின் கைது கடந்த வாரம் இடம்பெற்றிருக்கிறது என குறிப்பிடப்படுகிறது.
இந்தநிலையில் ஈக்குவடோர் ஜனாதிபதி Lenín Moreno மற்றும் அவரது மனைவி ஐரோப்பாவுக்கு மேற்கொண்ட விடுமுறையின்போது எடுக்கப்பட்ட சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட தனிப்பட்ட புகைப்படங்கள் கடந்த பெப்ரவரி மாதம் தனிப்பட்ட இணையத்தளம் ஒன்றின் ஊடாக அம்பலமானது.இதனால் Lenín Moreno, மிகுந்த சீற்றமடைந்திருந்தார். தமது நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் துளிர்விட்டுள்ள புதிய உறவினால் அதிருப்தியடைந்துள்ள ஜூலியனும் அவரது விக்கிலீக்ஸ் இணையமும்தான் தனது தனிப்பட்ட புகைப்படங்களை எப்படியோ எடுத்து வெளி இணையத்தளங்களுக்கு கொடுத்துவருகிறார்கள் என்று சந்தேகம் கொண்டார். இதன் பிறகு ஏற்பட்ட திடீர் மாற்றங்கள்தான் ஜூலியனை லண்டனிலுள்ள தூதரகத்திலிலிருந்து வெளியேற்றும்வரையிலான முடிவாக வளர்ச்சிகண்டது என்று அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
