SKIP TO MAIN CONTENT

ஜூலியனுக்கு மே 2 வரை தடுப்புக்காவல்! கைது நடந்தது எப்படி? முழுமையான விபரங்கள்!

Wikileaks founder Julian Assange has been arrested after he was kicked out of the Ecuadorian embassy.
Wikileaks founder Julian Assange has been arrested after he was kicked out of the Ecuadorian embassy. Source: SBS News

4 min read

Published

Updated

Presented by Renuka


Skip to article content

லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில்வைத்து பொலீஸாரால் கைது செய்யப்பட்டு தூக்கிவரப்பட்ட விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜே எதிர்வரும் மே மாதம் 2 ஆம் திகதிவரை தடுப்புக்காவலில் வைக்கப்படுவார் என்று லண்டன் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதேவேளை, அவரை நாடுகடத்தக்கோரும் விண்ணப்பம் தாக்கல் செய்யப்படவிருப்பின் அவற்றை எதிர்வரும் ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜே நேற்று காலை லண்டனில் கைது செய்யப்பட்டார். 2012 ஆம் ஆண்டு முதல் அரசியல் தஞ்சம்கோரி லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரக்கத்தில் அடைக்கலமடைந்திருந்த ஜூலியன் 7 வருடங்களுக்கு பின்னர் - 2487 நாட்களுக்கு பின்னர் - நேற்று மாலை தூதரகத்தில் வைத்து கைது செய்யப்பட்டு பொலீஸாரால் தூக்கிச்செல்லப்பட்டார்.

அரசியல் தஞ்சம்கோரி தமது தூதரகத்தில் அடைக்கலமடைந்திருந்த ஜூலியன், தாங்கள் அடைக்கலம் அளித்த விதிமுறைகளை தொடர்ந்து மீறியதால், அவருக்கான பாதுகாப்பை விலக்கிக்கொள்வதாக ஈக்குவடோர் தூதரகம் அறிவித்ததை அடுத்து நேற்று லண்டன் பொலீஸார் அங்கு சென்று ஜூலியனை கைது செய்தார்கள்.

திடீர் கைதின் பின்னணி

அமெரிக்கா ஏனைய நாடுகளுடன் வைத்திருந்த உறவு மற்றும் அந்நாடுகளில் மேற்கொண்டுவந்த ரகசிய நடவடிக்ககைள் ஆகியவை உட்பட பல்வேறு விடயங்களை அமெரிக்காவின் முன்னாள் புலனாய்வு அதிகாரி ஒருவருடன் சேர்ந்து அம்பலப்படுத்தினார் என்றும் அதன் மூலம் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு பெரும் பங்கம் விளைவித்தார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட ஜூலியன், கடந்த பல வருடங்களாகவே அமெரிக்காவினால் தேடப்பட்டுவந்தார்.

இந்நிலையில், சுவீடன் பெண்கள் இருவரால் பாலியல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அவற்றில் குற்றவாளியாக சுவீடன் நீதிமன்றினால் தீர்ப்பளிக்கப்பட்டு பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தார். அதன் அடிப்படையில் பிரிட்டனில் வைத்து இவரை கைது செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் ஈக்குவடோர் தூதரகத்தில் ஜூலியன் தஞ்சமடைந்தார். அப்போதைய ஈக்குவடோர் அரசு ஜூலியனுக்கு அரசியல் தஞ்சம் அளித்தது மாத்திரமல்லாமல் ஈக்குவடோர் நாட்டு குடியுரிமையும் அளித்தது.

ஆனால், ஈக்குவடோரில் முன்பிருந்த அமெரிக்க எதிர்ப்பு ஆட்சி மாறி புதிய அரசு பதவியேற்றது. தற்போதைய ஜனாதிபதி அமெரிக்காவுடன் நெருக்கமான உறவுகளை பேணுபவர் என்று கருதப்படுகிறது. இந்நிலை லண்டனிலிருந்த ஈக்குவடோர் தூதரகத்திலும் எதிரொலித்தது. ஈக்குவடோருக்கு ஜூலியனுடனான உறவு கசக்க தொடங்கியிருந்தது. தூதரகத்தில் ஜூலியன் ஆக்ரோஷமாக நடந்துகொள்கிறார் என்றும் தங்களது விதிமுறைகளை கடைப்பிடிக்கிறார் இல்லை என்றும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

ஆனால், ஈக்குவடோர் தூதரகம் அங்குள்ள ஜூலியன் தொடர்பான சகல நடமாட்டங்களையும் அமெரிக்காவுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறது என்று விக்கிலீக்ஸ் சந்தேகித்தது. தூதரகத்திலுள்ள கமராக்கள் ஜூலியனின் சகல நடவடிக்கைகளையும் படம்பிடித்து அமெரிக்க பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பிக்கொண்டிருப்பதாக ஜூலியன் சந்தேகித்ததிலிருந்து, தூதரக கமராக்களை ஜூலியன் மறைக்கத்தொடங்கினார் என்று கூறப்படுகிறது. தூதரக பாதுகாப்பு அதிகாரிகளின் நடவடிக்ககைளிலும் ஜூலியன் சந்தேகமடையத்தொடங்கினார் என்றும் அவர்களுடன் அவர் மூர்க்கமாக நடந்துகொண்டார் என்றும் ஈக்குவடோர் தூதரக தரப்பில் கூறப்படுகிறது. இதனால், தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு ஜூலியன் தொடர்ந்து தடையாக இருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

நேற்று காலை நடந்தது என்ன?

இந்நிலையில், நேற்றைய தினம் தாங்கள் வழங்கிய பாதுகாப்பை விலக்குவதாக அறிவித்த ஈக்குவடோர், ஜூலியனுக்கு வழங்கிய தமது நாட்டு குடியுரிமையையும் ரத்து செய்வதாகவும் பிரித்தானிய அரசுக்கு தெரியப்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து காலை 10 மணியளவில் ஈக்குவடோர் தூதரகத்திற்கு விரைந்த பொலீஸார் ஈக்குவடோர் தூதரை சந்தித்தனர். அவர் தமது நாடு ஜூலியனுக்கு வழங்கும் பாதுகாப்பை வாபஸ் பெறுவது உட்பட அவரது குடியுரிமையை ரத்துச்செய்யும் ஆவணங்களை பொலீஸாரிடம் வழங்கினார். இதன் பின்னர், ஜூலியனிடம் சென்ற பொலீஸ் அதிகாரிகள் தங்களை அறிமுகப்படுத்தினர். அவரை கைது செய்ய வந்துள்ளதாக கூறினார்கள். அதற்கு மறுப்பு தெரிவுத்துக்கொண்டு தனது அறையை நோக்கி ஓடுவதற்கு முயற்சித்த ஜூலியனை பொலீஸார் மடக்கிப்பிடித்தார்கள். அவரது கைகளில் விலங்கு மாட்டுவதற்கு மிகுந்த சிரமப்பட்டார்கள். ஒருவாறு விலங்கை மாட்டி, அவரை குண்டுக்கட்டாக தூக்கிவந்து பொலீஸ் வாகனத்தில் ஏற்றினார்கள்.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட ஜூலியனுக்கு எதிராக சுவீடன் நாட்டு பெண்கள் முன்வைத்த பாலியல் வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டமை தொடர்பாக விசாரிக்கப்பட்டது. அந்த வழக்கில் சட்டத்துக்கு முகம் கொடுக்காமல் தூதரகத்தில்போய் ஒளிந்துகொண்டமைக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். மேலதிக விசாரணைகளுக்காக மே மாதம் 2 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரிவிட்டு, ஜூலியனை தடுப்பில் வைக்குமாறு அறிவுறுத்தினார்.

அதேவேளை, ஜூலியனுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கத்தின் வழக்கும் தாக்கலாகியிருப்பதால், அது தொடர்பில் அவரை நாடுகடத்துவது தொடர்பான விண்ணப்பங்களை தாக்கல் செய்வதாயின் ஜூன் 12 ஆம் திகதிக்கு முன்னர் அவற்றை நீதிமன்றில் தாக்கல் செய்யுமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

ஆனால், தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவித்த குற்றத்துக்காக ஜூலியனுக்கு அமெரிக்கவில் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற வாய்ப்பிருக்குமானால், அவரை பிரித்தானியா நாடு கடத்துமா என்ற சட்டச்சிக்கல் ஒன்று உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மறுபுறத்தில், ஜூலியனின் கைதுக்கு எதிராகவும் விடுதலைக்காகவும் உலகெங்கும் பல்வேறு குரல்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ளன. வல்லரசுகள் தங்களது இரகசிய நடவடிக்கைகளின் மூலம் உலகை வதை செய்துவந்த காரியங்களையெல்லாம் ஜூலியன் வெளிக்கொண்டுவந்தார் என்றும், மிகப்பெரிய மனிதப்படுகொலைகள், போர்க்குற்றங்கள் ஆகியவற்றையெல்லாம் ஜூலியன் அம்பலப்படுத்தினார் என்றும் அவரை தண்டிக்கமுடியாது. தண்டிக்கவும் கூடாது என்றும் பல்வேறு தரப்பில் குரல் எழும்பியுள்ளன.

ஜூலியன் கைதினை ரஷ்ய ஊடகம் பதிவு செய்தது எவ்வாறு?

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசான்ஜே லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்தில்வைத்து கைது செய்யப்பட்டு குண்டுக்கட்டாக தூக்கிவரப்பட்டு பொலீஸ் வாகனத்தில் ஏற்றப்படுகின்ற காட்சியானது உலகின் சகல ஊடகங்களிலும் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தாலும் அந்தக்காட்சியை நேரடியாக எடுத்தது ஒரே ஒரு ஊடகம்தான். அதுதான் Ruptly என்ற ரஷ்ய தொலைக்காட்சி நிறுவனம். அந்த நிறுவனத்திடமிருந்துதான் அனைத்து ஊடகங்களும் கைது காட்சியை வாங்கி ஒளிபரப்பிவருகின்றன.

ஜூலியனின் கைது தொடர்பில் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ள ரஷ்யாவுக்கும் இந்த கைதினை நேரடியாக சென்று பதிவு செய்த ஒரே ஒரு ஊடகத்துக்கும் ஏதாவது தொடர்புள்ளதா அல்லது வேறேதாவது உறவுள்ளதா என்று கேட்டபோது Ruptly ஊடக நிறுவனம் அந்த சந்தேகத்தை முற்றுமுழுதாக மறுத்திருக்கிறது.

ஜூலியன் அசான்ஜே விவகாரம் கிட்டத்தட்ட நெருக்கடிக்குள் உள்ளாகிவருவதை தாங்கள் பரிபூரணமாக உணர்ந்துகொண்டதாகவும் எந்நேரமும் எதுவும் நடைபெறலாம் என்ற சந்தேகம் இந்த மாத ஆரம்பத்திலேயே ஏற்பட்டுவிட்டதாகவும் கடந்த ஏப்ரல் மாதம் ஐந்தாம் திகதி முதல் லண்டனிலுள்ள ஈக்குவடோர் தூதரகத்துக்கு முன்பாக தங்களது ஊடகவியலாளர்கள் 24 மணி நேரமும் அங்கு இடம்பெறும் நடவடிக்கைகளை கமராவில் பதிவு செய்துகொண்டிருந்ததாகவும் Ruptly ஊடகத்தின் பிரதி செய்தி ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

எதுவுமே நடைபெறாதபோதும் கடந்த ஒரு வாரமாக மூடியிருந்த ஈக்குவடோர் தூதரக கதவுகளை தங்களது கமராக்கள் படம்பிடித்துக்கொண்டிருந்ததாகவும் தங்களது ஊடகவியலாளர்கள் சுழற்சி முறையில் இரவும் பகலுமாக சென்று செய்திக்காக காத்திருந்ததாகவும் நேற்றைய தினம் தமது எதிர்பார்ப்பு பலித்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு பேர்ளினில் தலைமையகத்தை கொண்டுள்ள ஊடகத்திற்கு ஜூலியன் கைது செய்தி மிகப்பெரிய பெயரைப்பெற்றுக்கொடுத்துள்ளது மாத்திமல்லாமல் உலகின் அத்தனை ஊடகங்களும் Ruptly நிறுவனத்திடம்தான் இந்த காணொளியை விலைகொடுத்து வாங்கியிருப்பதால் பெரும் லாபமும் ஈட்டியுள்ளன.


Follow SBS Tamil

Download our apps

Watch on SBS

Tamil News

Stream now