1940களில், தமிழ்நாட்டிலிருந்து நரசிம்ஹன் ரங்காச்சாரி என்பவர் மைசூர் மகாராஜாவின் மாளிகையில் வைத்தியராகக் கடமையாற்றச் சென்றிருந்தார். அவருக்கு ஜெயராம் என்ற பெயரில் ஒரு மகன். வழக்குரைஞராக பயிற்சி பெற்றுக்கொண்டிருந்தார் ஜெயராம். இதே வேளை, Hindustan Aeronautics Limited என்ற நிறுவனத்தில் பணிபுரிவதற்காக, தமிழ்நாட்டின் சிறீரங்கம் என்ற ஊரிலிருந்து, ரங்கசாமி என்பவரும் மைசூரில் வசித்து வந்தார். அவருக்கு ஒரு மகனும், வேதவல்லி, அம்புஜவல்லி, பத்மவல்லி என்ற பெயரில் மூன்று பெண்களும் இருந்தார்கள். விமானப் பணியாளியாகப் பணியாற்ற அம்புஜவல்லி சென்னைக்குச் சென்றுவிட்ட பின்னர், வேதவல்லிக்கும் ஜெயராமிற்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு ஜெயக்குமார் என்ற மகனும் கோமளவல்லி என்ற பெயரில் ஒரு மகளும் பிறந்தார்கள்.
சம்பிரதாய முறைப்படி, அவர்கள் மகள் கோமளவல்லி ஒரு வயதான போது, அவளுடைய இரண்டு பாட்டிமார்கள் வாழ்ந்த வீட்டின் பெயர்களான ஜெயவிலாஸ் மற்றும் லலிதவிலாஸ் என்பவற்றிலிருந்து, ஜெயலலிதா என்ற பெயர் சூட்டப்பட்டது.
வழக்குரைஞராகப் பயிற்சி பெற்ற ஜெயராம், வழக்குரைஞராக ஒரு நாளும் வேலை செய்தது கிடையாது. தனது குடும்ப சொத்துகள் அனைத்தையும் சூதாடுதல் உள்ளிடவற்றில் ஈடுபட்டு வீண் விரயம் செய்ததாக சொல்லப்படும் ஜெயராம், ஜெயலலிதா பிறந்த இரண்டாவது வருடத்திலேயே இறந்துவிட்டார்.
இதே வேளை, விமானப் பணியாளியாகப் பணியாற்ற சென்னைக்குச் சென்ற ஜெயலலிதாவின் சித்தி அம்புஜவல்லி, நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் சொத்துகளை இழந்துவிட்ட சகோதரி வேதவல்லியை சென்னைக்கு வரவழைத்தார். வேதவல்லியும் நாடகங்களிலும் திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். சந்தியா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
ஆனால், படிப்பில் சுட்டியான ஜெயலலிதாவை என்ன செய்வது? பத்மவல்லியின் பராமரிப்பில் பெங்களூர் நகரில் Bishop Cotton Girls' Schoolல் தொடர்ந்து கல்வி பயின்று வந்தார் ஜெயலலிதா. பரதநாட்டியமும் கற்றுக்கொண்டார்.
அவரது சித்தி பத்மவல்லி திருமணம் செய்துகொண்டபோது, ஜெயலலிதாவிற்குப் பத்து வயது. சென்னைக்கு வந்து, தாயாருடன் வாழ ஆரம்பித்தார் ஜெயலலிதா. Church Park Presentation Convent என்று தற்போது அழைக்கப்படும் Sacred Heart Matriculation Schoolல் தனது படிப்பைத் தொடர்ந்தார். பத்தாம் வகுப்பின் தேர்வுகளில், பாடசாலையில் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதிலும் முதல் மாணவராகத் தேர்வானார் ஜெயலலிதா. ஒரு வழக்குரைஞராகத் தேர்ச்சி பெற வேண்டும் என்று அவர் விரும்பினார். சென்னைப் பல்கலைக் கழகத்தின், Stella Maris கல்லூரிக்கு அனுமதி பெற்றிருந்தாலும் அதில் பட்டப்படிப்பை அவர் முடிக்கவில்லை. தனது தாயார் வேதவல்லி எனும் சந்தியாவுடன் திரைப்படங்களிலும் நாடகங்களிலும் சிறுமியாக நடிக்க ஆரம்பித்தார்.

Source: SBS Tamil
தனது பதிமூன்றாவது வயதில் இரண்டு கன்னட திரைப்படங்களிலும் ஒரு ஆங்கிலப் படத்திலும் நடித்திருந்தார். 1964ம் ஆண்டு திரைப்பட உலகின் விருது விழாவில் ஜெயலலிதாவின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கிருந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் கவனத்தை ஜெயலலிதா ஈர்த்தார்.... தமிழ் திரையுலகில் நுழைந்தார். சிறுமி ஜெயலலிதா அம்மு என்று அன்போடு அழைக்கப்பட்டார்.
முதலில் சிறு பாத்திரங்களில் நடித்திருந்தாலும், மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்கள் தனது 48வது வயதில் 17 வயதான ஜெயலலிதாவுடன் நடித்த “ஆயிரத்தில் ஒருவன்” திரைப்படம் ஜெயலலிதாவை ஒரு கதாநாயகியாக்கியது. தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார். வழக்குரைஞராக வரவிரும்பிய ஜெயலலிதா, மனம் விரும்பி நடிப்புத் தொழிலைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும், அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். மக்கள் திலகம் எம் ஜி ஆர் அவர்களுடன் ஜெயலலிதா நடித்த 28 திரைப்படங்களும் வெற்றிப்படங்களே. நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் ஜெயலலிதா நடித்த 17 திரைப்படங்களில் 16 திரைப்படங்கள் வெற்றிப்படங்கள். மொத்தமாக அவர் நடித்த 89 தமிழ் திரைப்படங்களில் 84 திரைப்படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்தன. அவர் தமிழில் மட்டுமல்ல தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஹிந்தி மொழி திரைப்படங்களிலுமாக மொத்தம் 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
அவர் காலத்தில், அதிகூடிய ஊதியம் பெற்ற நடிகை இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் திரை உலகில், பல ஆண் நடிகர்களிலும் அதிக ஊதியம் பெற்ற ஒரே நடிகை ஜெயலலிதா தான்.
மக்கள் திலகம் எம் ஜி ஆரை தனது குருவாக ஏற்றுக்கொண்ட ஜெயலலிதா, 1980ம் ஆண்டு எம் ஜி ஆர் ஆரம்பித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற கட்சியில் இணைந்தார். ஜெயலலிதாவை அதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக அறிவித்தார் எம்ஜிஆர். எம்ஜிஆருக்காக ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அதற்கு முன்னர் தமிழ்நாட்டின் எந்தக் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளரும் செய்யாததை ஜெயலலிதா செய்ததாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த உறுப்பினர் அரங்கநாயகம் குறிப்பிட்டுக் கூறுகிறார்.

Source: SBS Tamil
தமிழக முதல்வராக காமராஜர் இருந்த போது கிராமங்களிலும் பள்ளிகள் தொடங்கப்பட்டு, பள்ளி நாட்களில் மாணவர்களுக்கு மதிய உணவு கொடுக்கும் திட்டமும் கொண்டுவரப் பட்டது. தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர் பணி ஏற்றபின் பள்ளி நாட்களை தவிர மற்ற நாட்களில் மதிய உணவு வழங்கப்படாததை அறிந்த எம்ஜிஆர் அனைத்து நாட்களிலும் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட உத்தரவிட்டார். அதனை மேற்பார்க்கும் பொறுப்பு ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டது.
1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதாவுக்கு நாடாளுமன்றத்தில் 185வது இருக்கை அளிக்கப்பட்டது. இது பல காலத்திற்கு முன்னர் அறிஞர் அண்ணா அவர்களின் இருக்கை என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற பங்களிப்பிலும் ஜெயலலிதா மிளிர்ந்தார். அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார். தனது தாய் சந்தியாவுக்கு அடுத்து, முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியை ஜெயலலிதா மிகவும் நேசித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம். ஜி. ஆர் மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த போது, தமிழகமெங்கும் எம்ஜிஆருக்காகப் பிரச்சாரம் செய்தார் ஜெயலலிதா. அ.தி.மு.க கட்சிக்கு மட்டுமல்ல, தனக்கும் மக்களிடையே ஈர்ப்பை ஏற்படுத்த இந்த சந்தர்ப்பத்தை ஜெயலலிதா நன்கு பயன்படுத்திக்கொண்டார்.
எம். ஜி. ஆரின் இறப்புக்குப் பின்னர் அ.தி.மு.க இரண்டு பெண் தலைவர்கள் அடிப்படையில் பிரிந்தது. ஒருவர் எம். ஜி. ஆரின் துணைவியார் ஜானகி, மற்றவர் ஜெயலலிதா. இந்தப் பிளவினால் ஜெயலலிதா தலைமையிலான அணி தோல்வியைக் கண்டது. பின்னர் இரு அணிகளும் ஒன்றாக இணைய அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டார். எம் ஜி ஆரின் அரசியல் வாரிசாக, இறக்கும்வரை அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார் ஜெயலலிதா.
1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சிப் பதவி மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார் ஜெயலலிதா. 1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001-’06 காலகட்டத்தில் ஜெயலலிதா மீது பல ஊழல் குற்றச் சாட்டுகள் பதியப்பட்டன. டான்சி வழக்கு காரணமாக, அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார்.
2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்!

Source: Wikipedia
அமெரிக்காவில் அதிபருக்கு அடுத்தபடியாக, மிகவும் பலம்வாய்ந்த பொறுப்பிலிருந்த அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் Hillary Clinton ஒரு இந்திய மாநில முதலமைச்சரை நேரில் சந்ததென்றால் அது ஜெயலலிதாவை மட்டுமே.
பிறப்பினால் ஒரு பிராமணப் பெண்ணான ஜெயலலிதா, பிராமணர்களுக்கு எதிர்இயக்கமாகத் தோன்றிய திராவிட இயக்கத்தைக் கட்டிக்காக்கும் வலுவான தலைவர்களில் ஒருவராக இருந்தது ஒரு வரலாற்று முரண். தேசியம் என்ற பெயரில் ஒற்றையாட்சியின் கீழ் படிப்படியாக இந்தியாவைக் கொண்டுவரும் முயற்சிகளுக்கு எதிராகவும் மதவாத அரசியல் தமிழகத்தில் பரவ ஒருவகையில் சவாலாகவும் இருந்தவர் ஜெயலலிதா. தன்னுடைய ஆரம்ப காலத்திலிருந்து கடைசிக் காலம் வரை மாநிலங்களின் உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். அந்த வகையில், இந்தியாவின் பன்மைத்துவத்துக்குத் தொடர்ந்து பங்களித்து வந்தவர். மக்கள் நலத் திட்டங்கள் என்ற பெயரில் மேட்டிமைவாதிகளால் நிராகரிக்கப்பட்ட பல மக்கள் நலத்திட்டங்களைத் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு அறிமுகப்படுத்திய சமூகநல அரசியலில் ஜெயலலிதாவுக்கு முக்கியப் பங்கு உண்டு. தொட்டில் குழந்தைகள் திட்டம் முதல் நகர்ப்புறச் சலுகை விலை அரசு உணவகங்கள், மருந்தகங்கள், மாணவர்களுக்கான மடிக்கணினிகள், ஏழைகளுக்கான கால்நடைகள்திட்டம் வரை என்று பல திட்டங்களைக் கூறலாம்.
அம்மு என்று அன்போடு அழைக்கப்பட்டவர், அம்மா என்று தமிழக மக்கள் பலராலும் அன்போடு அழைக்கப் பட்டவர் தன் இருப்பைத் தக்க வைக்கப் பல சவால்களை எதிர் கொண்டவர். ஆண் ஆதிக்கம் மிக்க தமிழ்நாட்டின் திரைப்படத் துறையிலும், அரசியலிலும் ஒரு இரும்புப் பெண்ணாக உருவெடுத்தவர்.
அதிமுக இருக்கும்வரை, அவர் நடித்த திரைப்படங்கள், திரையரங்குகளில் காண்பிக்கப்படும்வரை அவர் பெயர் நிலைத்து நிற்கும்.
அளவு கடந்த போட்டி, பொறாமை, சூது, வன்முறை, சூழ்ச்சி நிறைந்த அரசியல் களத்தில், மாறுபட்ட கொள்கைகள் கொண்ட பல அரசியல் ஆளுமைகளுடன் தனியொரு பெண்மணியாக களம் கண்ட மறைந்த தமிழக முதல்வரின் மறைவு, அரசியலுக்கு அப்பாற்பட்ட பொதுமக்கள் முதல் தமிழக, இந்திய அரசியல் ஆளுமைகள் வரை பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில், நிச்சயமாக அவரை சார்ந்த, அவருக்கு துணை நின்ற, அவர் பால் அன்பு கொண்ட பலருக்கும் பேரிழப்பு.
விரும்பிய வாழ்வை வாழ முடியாவிட்டாலும், கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்தி உச்சம் தொட முடியும் என்பதற்கு ஜெயலலிதா அவர்கள் ஒரு மிகச்சிறந்த உதாரணம்.
Share
