தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்துவிட்டார். இந்தியாவின் ஒப்பற்ற மக்கள் தலைவர்களில் ஒருவர், சம காலத்தில் அவர் அளவுக்கு மக்களால் நேசிக்கப்பட்டவர், கொண்டாடப்பட்டவர் - வழிபடப்பட்டவர் என்றும்கூடச் சொல்லலாம் - எவரும் இல்லை. அவருடைய கட்சியையும் தாண்டி தமிழக மக்களில் ஒரு பெரும் பகுதியினர் அவரை 'அம்மா' என்றே அழைத்தார்கள்; அம்மாவாகவே பார்த்தார்கள். குறிப்பாக, தமிழகப் பெண்களில் பெரும் பகுதியினர் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு அவரைப் பெண் சக்தியின் அடையாளமாக வரித்துக்கொண்டார்கள். 'ஒரு மரணம் யாராலும் நிறைக்க முடியாத வெற்றிடத்தை உருவாக்குகிறது' என்ற வார்த்தைகள் ஜெயலலிதாவைப் பொறுத்த அளவில் முழுக்கப் பொருந்தக் கூடியது.
ஜெயலலிதாவின் பின்னணி என்ன?
திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா1948, பிப்ரவரி 24 அன்று மைசூர், மாண்டியாவில் பிறந்தவர். கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி செல்லும் பிராயத்திலேயே நடிக்கத் தொடங்கி, தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார். அவர் மனதுக்குப் பிடித்துதான் நடிப்புத் தொழிலை தேர்ந்தெடுத்தார் என்று சொல்வதற்கில்லை... ஆனால், அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். தன் முழு உழைப்பையும் கொட்டினார். ஆம், இதுதான் அவர் இயல்பே! எதையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது. இதை அவர் ஒரு நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார்.
இதனால்தான் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் முத்திரைப் பதித்து 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில், அவரால் நடிக்க முடிந்தது.
அரசியல் அரங்கில் அ.தி.மு.க உறுப்பினராக அடியெடுத்து வைத்த ஜெ. 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும், அவர் மிளிர்ந்தார். அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார். தன் தாய் சந்தியாவுக்கு அடுத்து இந்திரா காந்தியை ஜெயா மிகவும் நேசித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும்வரை அக்கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தார்.
1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தின் மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, 2001, 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தேர்வானார். 2001-’06 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார்.
2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்! தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.
பிறப்பினால் ஒரு பிராமணப் பெண்ணான ஜெயலலிதா, பிராமணர்களுக்கு எதிர்இயக்கமாகத் தோன்றிய திராவிட இயக்கத்தைக் கட்டிக்காக்கும் வலுவானதலைவர்களில் ஒருவராக இருந்தது ஒரு வரலாற்று முரண். தேசியம் என்ற பெயரில்ஒற்றையாட்சியின் கீழ் படிப்படியாக இந்தியாவைக் கொண்டுவரும் முயற்சிகளுக்குஎதிராகவும் மதவாத அரசியல் தமிழகத்தில் பரவ ஒருவகையில் சவாலாகவும் இருந்தவர்ஜெயலலிதா. தன்னுடைய ஆரம்ப காலத்திலிருந்து கடைசிக் காலம் வரை மாநிலங்களின்உரிமைக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவந்தவர். அந்த வகையில், இந்தியாவின்பன்மைத்துவத்துக்குத் தொடர்ந்து பங்களித்துவந்தவர். வெகுஜனத் திட்டங்கள்என்ற பெயரில் மேட்டிமைவாதிகளால் கிண்டல் அடிக்கப்பட்ட பல மக்கள் நலத்திட்டங்களைத் தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டுஅறிமுகப்படுத்திய சமூகநல அரசியலில் ஜெயலலிதாவுக்கு முக்கியப் பங்கு உண்டு.தொட்டில் குழந்தைகள் திட்டம் முதல் நகர்ப்புறச் சலுகை விலை அரசு உணவகங்கள், மருந்தகங்கள், மாணவர்களுக்கான மடிக்கணினிகள், ஏழைகளுக்கான கால்நடைகள்திட்டம் வரை என்று பல திட்டங்களைக் கூறலாம்.
"மக்களால் நான், மக்களுக்காகவே நான்" - இந்த தாரக மந்திரச் சொல்லைக் கேட்டதுமே, தமிழக மக்கள் அனைவர் மனதிலும் நிழலாடும் உருவமாகத் திகழ்ந்தவர் முதலமைச்சர் ஜெயலலிதாதான்.
திரைத்துறையிலும், அரசியல் வாழ்விலும் தனக்கென ஒரு தனியிடத்தைக் கொண்டு, இறுதி மூச்சு உள்ளவரை, எண்ணற்ற சாதனைகளைப் படைத்தவர் ஜெயலலிதா.
Share
